தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் தொடர்பு நிலைப்பேசி, உலாப்பேசி எண்கள்.
உலகின் மாபெரும் ஜனநாயகமான நம் நாட்டில், ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை தேர்தலை நடத்துவதும், அத்தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் நமக்கான பிரதிநிதிகளும் தவிர்க்க முடியாத விடயமாகி விட்டது. அப்படி தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஆடுகின்ற ஆட்டங்களை விட, அவர்களின் எடு பிடிகள் ஆடுகின்ற ஆட்டம் வார்த்தைகளால் சொல்ல முடியாதவை.
இது குறித்து ஆராய்ச்சிக்காக சட்டமன்ற வளாகத்தில் அமைந்துள்ள நம் பிரதிநிதிகளின் அலுவலகங்களை பலமுறை கண்காணித்த போதுதான், எடுபிடிகளின் எண்ணில் அடங்கா ஆட்டங்களை அறிய முடிந்தது.
ஒருபக்கம் மக்கள் பிரதிநிதிகள் தங்களுக்கே உரித்தான வேலைகளில், பஞ்சாயத்துக்களில், எதிர்கட்சிக்கு விசுவாசமான தலைமைச் செயலக ஊழியர்களை மிரட்டுதல் போன்றவற்றில் ஈடுபட்டிருக்க, அவர்களின் எடுபிடிகளோ மக்கள் பிரதிநிதிகளின் அலுவலக நி(தொ)லைப்பேசி எண்களில் இருந்து, யார் யாருக்கோ போன் செய்து, தன் தலைவரின் பெயரைக் குறிப்பிட்டு, உன் பேர் என்ன? ஒழுங்கா இருக்க மாட்டியா? ஒழுங்கா வேலைய பார்க்க மாட்டியா? அவனுங்களை உள்ளே தள்ளமாட்டியா? என்று மிரட்டிக் கொண்டு இருந்தார்கள்.
நான் போன்ல பேசிட்டேன்ல. இனிமே எல்லாம் ஒழுங்கா நடக்கும். கவலைப்படாம ஊருக்கு அல்லது வீட்டுக்கு போங்க என்று கறக்க வேண்டிய பணத்தை கறந்து கொண்டு அனுப்பி விட்டார்கள். இப்படி மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அவர்களின் எடுபிடிகள்கிட்டே போனவங்க எல்லோருமே நியாயம் இருக்கிறவங்க கிடையாது. எதாவது சட்டத்துக்கு புறம்பான செயல்களை செய்து விட்டு, அதிலிருந்து தப்பிக்க இவர்களின் உதவியை நாடுபவர்கள்தாம்.
எடுபிடிகள் பேசும் தோரைனை மற்றும் தொலைப்பேசி எண்ணைப் பார்த்ததுமே பலரும் பயந்து விடுவார்கள். அதிலும், அரசு ஊழியர்கள் என்றால், பேதியாகி விடும்.
இதுமட்டுமல்லாமல் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் பெயரைச் சொல்லி வார்டு உறுப்பினர்கள் முதல் கவுன்சிலர்கள் உயர் அரசு ஊழியர்கள் வரை செய்யும் அடாவடிதனம் கொஞ்ச நஞ்சமல்ல. இதுபோன்ற அடாவடிதனங்களில் ஈடுபடும் எவரையும் தற்போதைய முதலமைச்சர் சும்மா விட்டு வைப்பதில்லை என்பது நீங்கள் அறிந்ததே!
உங்களின் ப(தொ)குதிக்கு தேர்தலுக்கு தேர்தல் மட்டுமே தலையைக் காட்டும் மக்கள் பிரதிநிதிகளை சந்திக்க, விபரம் கேட்க, கருத்து சொல்ல இனி எங்கும் அலைய வேண்டாம். அவர்களின் இல்ல, அலுவலக நிலைப்பேசி அல்லது உலாப்பேசியிலேயே தொடர்பு கொள்ளும் பொருட்டு, அவர்களின் அலுவலக, இல்ல மற்றும் உலாப்பேசி எண்களை, தமிழ்நாடு அரசு இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
ஆளுநர், முதல்வர், எதிர்கட்சி தலைவர் உட்பட ஒரு சிலருக்கு உலாப்பேசி எண்கள் கொடுக்கப்படவில்லை. ஆனால், எல்லோருக்குமே, அவரவர் தொகுதி மற்றும் பதவி பெயர்களில் மின்னஞ்சல் முகவரி வழங்கப்பட்டுள்ளது.
தொகுதியின் வரிசை எண்கள் வாரியாக
தொகுதியின் ஆங்கில வரிசைப் பெயர்கள் வாரியாக
வேட்பாளரின் ஆங்கிலப் பெயர் வாரியாக
இவைகளைக் கொண்டு சூழ்நிலைக்கு ஏற்ப உங்களின் தனிப்பட்ட பிரச்சினைகள் குறித்து மட்டும் பேசாமல், பொதுப் பிரச்சினைகள் குறித்தும், அவர்களின் செயல்பாட்டில் உள்ள நிறைகள் மற்றும் குறைகள் குறித்த கருத்துக்களை, ஆலோசனைகளை சொல்லுங்கள். ஜனநாயகத்தை வென்றெடுங்கள்.
0 Add your Comments/Feedback:
Post a Comment