Warrant Balaw Blog - वारंट बाला चिट्ठा

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியம் உணர்ந்து இந்த வலைப்பூவிற்கு வருகை தந்துள்ள உங்களை வருக! வருக!! என அன்புடன் வரவேற்று பயன் பெறுக! பெறுக!! என வாழ்த்துகிறேன்.

Neethiyaithedy

,

,

..

..

வக்கீல் தொழில் குறித்து தேசத்தந்தை மகாத்மா காந்தி…


வக்கீல் தொழில் ஒழுக்கக்கேட்டையே போதிக்கிறது. வக்கீல் தொழிலுக்கு வருபவர்கள் பணம் சம்பாதிக்க வருகிறார்களே ஒழிய துன்பப்படுபவர்களுக்கு உதவி செய்வதற்காக அல்ல. பணக்காரர் ஆவதற்கான தொழிலில் வக்கீல் தொழிலும் ஒன்று.
மனிதர்களுக்குள் தகராறுகள் ஏற்படும் போது, வக்கீல்கள் மகிழ்ச்சி அடைகிறார்கள். வக்கீல்களுக்கு வேலை என்பதே இல்லை. இவர்கள் சோம்பேறிகளாக இருப்பவர்கள். இவர்கள் தெய்வப்பிறவியோ என்று ஏழை மக்கள் எண்ணும் வகையில் ஆடம்பரத்தையும் மேற்கொள்கின்றனர்.
இவர்கள் சகோதரர்களை விரோதிகள் ஆக்கியிருக்கிறார்கள். இவர்களால் குடும்பங்கள் அழிந்து போயிருக்கின்றன. மக்கள் தங்களின் தகராறுகளை தங்களுக்குள்ளேயே தீர்த்துக் கொள்ள வேண்டும்.
வக்கீல் தொழில், விபச்சாரத்தை போல இழிவானது என கருதி, வக்கீல்கள் கை விட வேண்டும். வக்கீல் தொழில் குறித்து நீங்கள் நன்றாக அறிந்திருந்தால், எனக்கு இருக்கும் இவ்வெறுப்பே உங்களுக்கும் ஏற்படும்.

நீதிபதிகள் குறித்து தாத்தா மகாத்மா காந்தி…

வக்கீல்களைப் பற்றி நான் கூறியனயாவும் நீதிபதிகளுக்கும் பொருந்தும். நீதிபதிகள் பெரியப்பன் பிள்ளைகளைப் போன்றவர்கள். வக்கீல்கள் சிற்றப்பன் பிள்ளைகளைப் போன்றவர்கள். ஒருவருக்கொருவர் பக்க பலமாய் இருப்பவர்கள். இவைகள் முற்றிலும் உண்மை. இவைகளுக்கு எதிரான எந்த கூற்றும் பாசாங்கு (நடிப்பே) ஆகும். 
ஆதாரம்: தாத்தா மகாத்மா காந்தி 1909 – ஆம் ஆண்டு, தனது நாற்பதாவது வயதில் எழுதிய முதல் நூலான இந்திய சுயராஜ்யம் நூலின் 11 – வது கட்டுரையில் இருந்து சுருக்கித் தொகுத்தவர், சட்ட ஆராய்ச்சியாளர் வாரண்ட் பாலா. 
தமிழ் வெளியீடு: காந்திய இலக்கியச் சங்கம், மதுரை – 625020. நிலைப்பேசி எண் 04522533957. 2012 ஆம் ஆண்டில் விலை ரூ.15
 
நவஜீவன் பப்ளிகேசன்ஸ், அகமதாபாத் – 380 041. தொலைபேசி, +91-79-2754132,  இணையதளம்:www.navajivantrust.org 
மகாத்மாவின் பொற்காலம் 02-10-1869 முதல் 30-01-1948 வரை.

அரசு ஊழியர்கள், வக்கீல்கள் மற்றும் நீதிபதிகள் குறித்து தந்தைப் பெரியார்…

வக்கீல் தொழிலும், அரசு ஊழியமும் ஆங்கிலேய ஆட்சியின் பயனாய், இந்திய மக்களுக்கு ஏற்பட்டுள்ள இரண்டு துன்பங்கள். இவ்விரண்டும் இந்த நாட்டில் பிரபுத் தன்மையை காப்பாற்ற இருக்கிறதே தவிர, நியாயத்தைச் செய்யவோ, ஏழைகளைக் காப்பாற்றவோ இல்லவேயில்லை.
நாட்டில் இவ்வளவு ஒழுக்கக்குறைவும், நாணயக்குறைவும், தரித்திரமும், மக்களுக்குக் கஷ்டமும், அலைச்சலும், எதிரெதிரான ஏழைத்தன்மையும், பணக்காரத் தன்மையும் இருப்பதற்கு காரணமும் இவ்விரு தொழில்களே. ஏழைகளையும், மத்தியத்தர மக்களையும் தலையெடுக்க விடாமல் செய்து வருவது, இவ்விரு தொழில்களுமே தவிர, வேறொன்றுமில்லை.
சாதாரண மக்களுக்கு நீதி கிடைப்பதில்லை என்பதோடு, பணக்காரனாய் இருப்பவன் பணத்தின் மகிமையால், 100 க்கு 90 வழக்குகளில், தன் இஷ்டப்படி நியாயம் பெறுகின்றான். நீதிபதிகளும், வக்கீல்களும் ஏழை மக்கள் நீதி பெறுவதற்கு இடையூறாகவும், பணக்காரர்கள் தங்கள் இஷ்டப்படி நீதி பெறுவதற்கு அனுகூலமாகவும் இருக்கின்றார்கள்.
இன்றைய வக்கீல் முறையே, மனித சமூகத்தின் ஒழுக்கத்திற்கும், நாணயத்திற்கும், சாந்திக்கும், ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கும் நேர் விரோதமானதாகும். அதுமாத்திரமல்லாமல், தேசத்தின் ஒழுக்கமும், நாணயமும், சுயமரியாதையும் கெட்டுப் போனதற்கு வக்கீல்களே காரணஸ்தர்கள் என்று சொல்வது சிறிதும் மிகைப்பட கூறுவதாகாது.
நமது நாட்டுப் பணக்காரர்கள் அநேகருக்கு அயோக்கியத்தனமும், ஆணவமும், நாணயக் குறைவும், நாட்டின் நலனுக்கு பொறுப்பற்ற தன்மையாய் நடந்து கொள்ளவும் காரணமே வக்கீல்கள்தாம். விவசாயிகள் பெரிதும் கடன்காரர்களாக இருப்பதற்கும் வக்கீல்களே காரணமாவார்கள்.
பிரச்சினைகளில் மக்களுக்கு அதிக நம்பிக்கையும், ஆசையும் ஏற்படுவதற்கு வக்கீல்களே காரணம் என்பதை யாரும் மறுக்க முடியாது.
நாளுக்கு நாள் வழக்குகள் அதிகரித்துக் கொண்டே போவதற்கும், நீதிமன்றங்கள் அதிகமாக  கூடுவதற்கும் வக்கீல்களே காரணமாவார்கள். உண்மையை ஒளிக்காமல் தெளிவாய் சொல்லப் வேண்டுமானால், மக்கள் அயோக்கியர்கள் ஆனதற்கும், நாணயக் குறைவாய் இருப்பதற்கும் கூட, வக்கீல்களே மிகமுக்கிய பொறுப்பாளிகள் ஆவார்கள்.
வெள்ளைக்கார வக்கீல்களிடமும், வெள்ளைக்கார அதிகாரிகளிடமும் காணமுடியாத, அநேக ஒழுக்கக் குறைவுகளும், நாணையக் குறைவுகளும், நடுநிலையற்ற தன்மையும், நம் வக்கீல்களிடமும், அரசு ஊழியர்களிடமும் தாராளமாய் இருந்து வருகின்றன.
இதனால் ஒழுக்கமும், நாணயமும் உள்ளவர்கள் வக்கீல் தொழிலுக்கும், அரசு ஊழியத்துக்கும் அருகதையற்றவர்களாகி விட்டனர்.
சிவில் நீதிமன்றங்களில், அழைப்பானை சார்பு செய்யும் சேவகன் முதல் குமாஸ்தா உள்ளிட்ட ஊழியர்கள் வரை, ஒழுக்கத்திலும், நாணயத்திலும், யோக்கியப் பொறுப்பிலும் மிக மிக மோசமாக நடந்து கொள்ள வெகுகாலமாகவே அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
நீதித்துறையில் லஞ்சமும், மாமூலும், மோசமும் உயர்நீதிமன்ற நீதிபதிகள், அத்துறையின் தலைவர்கள் என எல்லோருக்கும் தாராளமாய் தெரிந்தும், வேண்டுமென்றேயும் அனுமதித்துக் கொண்டிருக்கும் அளவு, மனிதனால் சொல்லக் கூட தகுதியுடவை அன்று.
வக்கீல்களின் தொல்லைகளும், நீதிபதிகளின் தொல்லைகளும் ஒருபாகம் என்றால், மற்ற ஊழியர்களின் தொல்லைகள் சகிக்க முடியாதவையாகும். இந்தத் துறைகளில் சீர்திருத்தமோ, ஒழுங்கோ செய்வதற்கு ஒரு அரசியல்வாதியோ, தேசியவாதியோ கிடையவே கிடையாது.
இதனால், வலுத்தவன் இளைத்தவனை நேருக்கு நேராய் உதைத்துத் தொல்லைப்படுத்தி, அவனிடம் உள்ளதைப் பிடுங்குவதை விட, நீதிமன்றம் மூலமும், வக்கீல்கள் மூலமும் பிடுங்கிக்  கொள்வதும், தொல்லைப்படுத்தி அவனை ஒழிப்பதும் மிகவும் சுலபமானதும், சட்டப் பூர்வமானதுமான காரியமாகவே இருந்து வருகிறது.
இம்முறையானது பணக்காரர்களுக்கு மிகவும் அனுகூலமாய் போய் விட்டதால், அவர்களும் சந்தோசத்தோடும், முழுப் பலத்தோடும் ஆதரிக்கிறார்கள்.
நடுநிலைமையற்ற அதிகாரிகளும், நாணயமும், ஒழுக்கமும், பொறுப்புமற்ற வக்கீல்களும், நீதிமன்ற ஊழியர்களும் தாங்கள் இந்த காரியங்களை செய்வதற்காக அடையும் ஊதியத்தையும், வரும்படியையும் பார்த்தால், உலகத்தில் எந்த யோக்கியமான நாணயமான மனிதனும், தொழிலாளியும் அடையும் ஊதியத்தை விட, எத்தனையோ மடங்கு அதிகமாக பெறுகின்றார்கள்.
ஒரு முன்சீப் என்பவர் (கீழ்நிலை சிவில் நிதிபதி) 300 ரூபாயில் ஆரம்பமாகி அக்கிரமங்களைச் செய்வதன் மூலம் படிப்படியாக மாதம் 4500 ரூபாய் வரை பெரும் உயர்நீதிமன்ற நீதிபதி வரை உயர்த்தப்படுகிறார்.
வக்கீல் மாதம் 100 ரூபாய் முதல் அக்கிரமமும், அயோக்கியத்தனமும், நாணயக்குறைவும், பித்தலாட்டமும் செய்யும் அளவிற்குத் தக்கபடி படிப்படியாய் கெட்டிக்காரனாகி மாதம் 10 ஆயிரம், 20 ஆயிரம், 50 ஆயிரம் ரூபாய் வரை பெறும்படியான யோக்கியதை உடையவனாகிறான்.
ஒரு வழக்கு தொடுத்து 20 வருடத்திற்கு மேலாகியும், இன்னமும் முடிவுறாது இருக்கிறதென்றால், விசாரணை முறையில் இருக்கும் யோக்கியதையைச் சொல்ல வேண்டுமா?
உலகத்தார் எல்லோராலுமே ஒழுக்கமற்றதென்றும், நாணயமற்றதென்றும், வெளிப் படையாய் தெரியும் படியாக நடந்து கொள்ளும் இத்தொழில்கள், “ஈனத் தொழில்களே”.

இத்தொழிலில் இவ்வளவு அக்கிரமத்திற்கான காரணமும், தீர்வும்

வக்கீல்களும், நீதிபதிகளும் ஒரே கூட்டத்தினராய் இருப்பது. அதாவது, வக்கீலே நீதிபதியாவதும், நீதிபதி வக்கீலாவதுமான முறை இருப்பது முதல் குற்றமாகும். வேறுபல நீதிபதிகளின் தீர்ப்புரைகளை மேற்கோள் காட்டி தீர்ப்புரைப்பது இரண்டாவது குற்றம். நியாய உலகம் சீர்பட வேண்டுமானால், அதில் ஒழுக்கத்திற்கும், நியாயத்திற்கும் சிறிதாவது இடமிருக்க வேண்டுமானால், முக்கியமாக இவ்விரண்டு முறைகளையும் ஒழித்து விட வேண்டும்.
மேலும், வக்கீல்கள் ஏராளமாக உற்பத்தி செய்யப்படுவதையும், கணக்கு வழக்கில்லாமல் வக்கீல்களை தொழில் நடத்த அனுமதி கொடுப்பதையும், நிறுத்திட வேண்டும். வக்கீல்கள் பெருகுவது, இந்த நாட்டின் நியாயத்தையும், ஒழுக்கத்தையும், சாந்தியையும் (அமைதியையும்) கெடுப்பதற்கு ஏற்பட்ட விஷக் கிருமிகளை வளர்ப்பதற்கே ஒப்பாகும். 
ஆதாரம்: 10-05-1931 தேதியிட்ட குடியரசு வார இதழின் தலையங்கத்தில் இருந்து தேவைக்கு ஏற்ப சுருக்கியும், ஒருங்கிணைத்தும் தொகுத்தவர், சட்ட ஆராய்ச்சியாளர் வாரண்ட் பாலா அவர்கள்.

தந்தைச் சொல்மிக்க மந்திரமில்லை!

நாம் இயற்கையை அனுசரித்துப் போனால், இயற்கையாகவே சட்டம் நமக்கு உதவுகிறது என்பதால், வக்கீல் தொழிலில் பொய்யை அனுசரித்ததே இல்லை. இதனால், நியாயமான வழக்குகள் மட்டுமே என்னிடம் வர, பொய் வழக்குகள் எல்லாம், வராமல் போய் எனது வேலை மிக எளிமையாகி விட்டது. வக்கீல்கள் மத்தியில் என் மதிப்பும் அதிகமாகியது.
வழக்கு தரப்பினர்களிடம் நட்பு கொண்டு, பிளவுப்பட்டிருக்கும் அவர்களை ஒன்றாக்கி, சமரசம் செய்து வைப்பதுதாம் உண்மையான வக்கீலின் கடமை. இக்கடமையைத்தாம் இருபது ஆண்டுகள் ஆற்றினேன். சமரசம் என்பது, இருதரப்புக்கும் வெற்றியைத்தரும் அழகுணர்ச்சி என்பதால், வக்கீல்களுக்கு எல்லா விதத்திலும் நன்மைதானே தவிர, எவ்விதத்திலும் நட்டமில்லை.
வழக்கு செலவுக்கு மீறிய கட்டணத்தை வாங்கியதே கிடையாது. நீதிமன்றம் தீர்ப்பு சொல்லும் வழக்கு செலவுத்தொகையே எனது கட்டணம். வழக்கை நடத்த முடியாமல் போனால், வாங்கிய கட்டணத்தை திருப்பித் தந்து விடுவேன். வழக்கின் வெற்றி தோல்வியை வைத்து, கட்டணத்தை நிர்ணயித்ததில்லை. ஆனாலும், எதிர்பார்த்ததை விட, தொழிலும் வருமானமும் நன்றாகவே இருந்தது. எனது இவ்வருமான தொழிலைக் கூட, பெரிய மனம் படைத்தோர் சேவை என்றே கூறினர்.
கட்சிக்காரருக்கு கிடைக்க வேண்டிய நியாயம் மற்றும் தண்டனையைப் பெற்றுத்தர தவறியதில்லை. அவமானம் என்பது குற்றம் புரிவதில்தாம் இருக்க வேண்டுமே தவிர, அக்குற்றத்திற்காக சிறை செல்வதில் அல்ல என்பதால், கட்சிக்காரருக்கு தண்டனையைப் பெற்றுத்தருவதும் நியாயமே.
அதேபோல, உரிமைகளுக்காக சிறை செல்லவும் தயாராய் இருக்க வேண்டும். எனது வாழ்நாளில், உரிமைகளுக்காக வருடக்கணக்கில் சிறையில் இருந்துள்ளேன்.
சட்டங்களைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. சாட்சிய சட்டத்தில் ஓரளவு தெளிவுண்டு.
தெரியாத சட்ட விசயத்தில், கட்சிக்காரர்களிடம், தெரிந்ததுபோல் காட்டிக் கொண்டதோ, வழக்கை நடத்தி தருகிறேன் என முன் வந்ததோ இல்லை. ஆனாலும், கட்சிக்காரர்கள் நானே நடத்த வேண்டும் என விரும்பினால், மூத்த வக்கீலிடம் ஆலோசனையைப் பெற உரிய கட்டணத்தைப் பெற்றும், உரிய ஆலோசனையைப் பெற்றும் நடத்திக் கொடுத்தேன்.
எனது திறமையை, சக்தியை பெரிய விசயங்களில் போராடுவதற்காக சேமித்து வைத்துக் கொண்டேன். பொது நலனுக்காக வழக்கு நடத்தியுள்ளேனே தவிர, எனது சொந்த வழக்கை நடத்தியதில்லை. ஒரே சமயத்தில் நான் ஏற்று நடத்திய எழுபது வழக்குகளில் ஒன்று மட்டுமே தோற்றது.
சத்தியமானது மலர் போல் மென்மையானதே ஆயினும், கல்போல் கடினமானது.
சரியாக சிந்திக்காத சொல் எதுவும் என் நாவில் இருந்தோ அல்லது பேனாவில் இருந்தோ வெளிவந்ததில்லை.
ஆதாரம்: மகாத்மா காந்தி அவர்கள் 1925 இல், தம்முடைய அறுபத்தி ஆறாவது வயதில் எழுதிய, சுயசரிதையான சத்தியசோதனையில் இருந்து ஒருங்கிணைத்து தொகுத்தவர், சட்ட ஆராய்ச்சியாளர் வாரண்ட் பாலா.

சத்தியாக்கிரகத்தின் சக்தி!

சட்டத்தால், சட்டத்தை, சத்தியத்தின் வழியில் நின்று மீறுவதே, “சத்தியாக்கிரகம்”.
சத்தியாகிரகம் என்பது, தர்மத்துக்கு விரோதமான சட்டங்களை சட்டப்பூர்வமான முறையில் எதிர்த்து, அதற்காக விதிக்கப்படும் சிறைத் தண்டனையை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்வதாகும்.
நியாயமற்ற சட்டங்களுக்கும், உத்தரவுகளுக்கும் பணிவது ஆண்மையற்ற செயல் என்பதை நாம் உணர்ந்திருந்தால், எந்தச் சட்டமும், உத்திரவும் நம்மை ஒன்றும் செய்திட அல்லது அடிமைப்படுத்தி விட முடியாது.
தனது உடமைகள், போலி கௌரவம், உறவினர்கள், மரணம் என எதற்கும் அஞ்சாதவர்களே, சத்தியாக்கிரகத்தை பின்பற்றவும், வெற்றியடையவும் முடியும்.
சத்தியாக்கிரகியின் அகராதியில், “எதிரி” என்ற சொல்லே இருக்கக் கூடாது. எந்தச் சூழ்நிலையிலும் பொய்ச் சொல்ல ஏமாற்ற, துன்புறுத்தக் கூடாது. தனது உயிரைத் துறந்தாகிலும், பிறரது உயிரைக் காக்க வேண்டும்.
சத்தியாக்கிரக கைதி, தனக்கும் சாதாரணக் கைதிக்கும் வேறுபாடு இருப்பதாகக் கருதக் கூடாது. சிறையில், சிறப்புச் சலுகை எதையும் பெறக்கூடாது. சுயக் கட்டுப்பாட்டில், சக கைதிகளுக்கு முன்னுதாரணமாய் இருக்க வேண்டும்.
ஒரு சத்தியாக்கிரகி, வெளியில் இருப்பதை விட, சிறைக்குள் இருக்கும்போதுதான், தனது லட்சியத்துக்கான தகுதியைப் பெறுகிறார். எந்த அளவிற்கு, அகிம்சையோடு சிறை விதிகளை மதித்து நடக்கிறாரோ, அந்த அளவிற்கு கொள்கையில் உயர்வார்.
அகிம்சை என்பது, ”இம்சையை அறிந்தே அனுபவிப்பது”.
ஒத்துழையாமை என்பது, ”அநீதிக்கு ஒத்துழைக்காமல் இருப்பது”.
பலமும், அறிவும் உள்ள ஒரு சத்தியாக்கிரகி, தானே முன்வந்து அநீதிக்கு ஒத்துழைக்காது, இம்சைகளை ஏற்பதால் மட்டுமே, நீதியைக் காக்கவும், அவதூறுகளைப் போக்கவும் முடியும்.
சத்தியாக்கிரகம் ஒன்றே, சமத்துவம், சமாதானம், சமநீதிக்கான சரியான வழி. மற்றவை எல்லாம் அழிவுக்கான வழியே; பகையே!
ஆதாரம்: மகாத்மா காந்தி 1924 ஆம் ஆண்டு எரவாடா சிறையில் இருந்த போது எழுதிய, சத்தியாக்கிரகம் என்னும் நூலில் இருந்து ஒருங்கிணைத்தும், சுருக்கியும் தொகுத்தவர், சட்ட ஆராய்ச்சியாளர் வாரண்ட் பாலா.

0 Add your Comments/Feedback:

Popular Posts

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியம் உணர்ந்து இந்த வலைப்பூவிற்கு வருகை தந்துள்ள உங்களை வருக! வருக!! என அன்புடன் வரவேற்று பயன் பெறுக! பெறுக!! என வாழ்த்துகிறேன்.
 photo Indian_Flag_Pole.gif

Social Media's

Total Pageviews

Labels

Flash Labels by Blogger Widgets

Unordered List

Blog Archive

Followers

 photo Animation4.gif
Related Posts Plugin for WordPress, Blogger...