Warrant Balaw Blog - वारंट बाला चिट्ठा

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியம் உணர்ந்து இந்த வலைப்பூவிற்கு வருகை தந்துள்ள உங்களை வருக! வருக!! என அன்புடன் வரவேற்று பயன் பெறுக! பெறுக!! என வாழ்த்துகிறேன்.

Neethiyaithedy

,

,

..

..

Apr 18, 2015

கிராம நிர்வாக ஊழியர்களும் குடிமக்களான நாமும்…!

நம் நாட்டில், அரசு வேலைக்குப் பலரும் போட்டி போட காரணமே, நோவாமல் நோம்பு எடுக்கலாம் என்ற சட்ட விழிப்பறிவுணர்வு இன்மைதான்.
அரசுப் பணிக்கு வருபவர்களுக்கு என்னென்ன சட்டக் கடமைகள் இருக்கின்றன, அக்கடமையை ஆற்றாமல் போனால் ஏற்படும் விளைவுகளுக்கு, சட்டப்படி எப்படியெல்லாம் பொறுப்பாக்கப்படுவோம்; நோண்டி நொங்கெடுக்கப் படுவோம்; தண்டிக்கப்படுவோம் எனத் தெளிவாக தெளிந்தால், நிச்சயமாக ஒருவர்கூட அரசுப் பணிக்கு வருவதை விரும்ப மாட்டார்கள்.
ஆனாலும், விரும்பி வருவதற்கு அடிப்படைக் காரணம், அவர்களின் சட்ட அறியாமை என்பது ஒருபுறமிருக்க, மறுபுறம், நமக்கென பணியாற்றக்கூடிய அவ்வரசு ஊழியர்களை எப்படி வேலை வாங்க வேண்டும் என மக்களாகிய நமக்கும் தெரிவதில்லை என்பது, அனைத்து விதத்திலும் அவர்களுக்குச் சாதகமாக இருக்கிறது. இத்தோடு, அரசு அலுவலர்கள் என்றால், நம்மை யாரும் எதுவும் செய்ய முடியாத அசுர பலம் மிக்கவர்கள் என்ற எண்ணம் அவர்களின் அடிமனதில் பதிந்து கிடக்கிறது.
உண்மையில் அவர்கள், நம்மால் தேர்ந்தெடுக்கப்படும் அரசால், நமக்கான பணிகளைச் செவ்வனே செய்வதற்காக, நமது வரிப்பணத்தில் இருந்து, ஊதியத்தின் அடிப்படையில் நியமிக்கப்படும் ஊழியர்களே என்பதால், அவர்களை அலுவலர்கள், அதிகாரிகள் என்ற ஆங்கிலேயர் காலத்து பட்டப் பெயர்களை தவிர்த்து அரசு ஊழியர்கள் என்று குறிப்பிடுவதே, சொல்வதே, அழைப்பதே, எழுதுவதே ஜனநாயகத்தில் மிகவும் சரியானது.
நமது வேலைக்காக நம்மால் பணியமர்த்தப்படும் வேலைக்காரர் செய்யும் வேலையில் அவரைவிட நமக்கு நல்ல பரிச்சயம் இருந்தால் தானே, அவர் செய்த வேலையில் குற்றம் குறைகளைக் கண்டறிந்து, குறைகளைக் களையெடுக்கவும், கற்பிக்கவும் முடியும். அப்படியில்லாத போது, அவ்வேலைக்காரர் என்ன செய்கிறாரோ, சொல்கிறாரோ அதுவே சரியானது என்பதைத்தானே ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கும்?
இன்று இப்படித்தானே நமது நிலைமை இருக்கிறது!?
நாட்டில் நிலவும் அத்தனை பிரச்சினைகளுக்கும் அடிப்படைக் காரணம், அரசு ஊழியர்கள் தங்களின் கடமைகளைச் சரியாக செய்யாததுதான் என்று சொன்னால், சற்றும் மிகையல்ல; சாலப் பொருந்தும்.
நாட்டின் முதுகெலும்பே கிராமங்கள்தான் என்று சொல்லாடல், சொல் அளவில் கையாளப்படுகிறதே ஒழிய, செயல் அளவில் அத்தகைய கிராமங்களில் தங்களின் கவனத்தைச் செலுத்த வேண்டிய கிராம நிர்வாக அலுவலர்களும், அக்கிராமங்களில் வாழும் நாமும் செலுத்துவதில்லை என்பதே உண்மை.
மக்களின் நல்வாழ்விலும், குற்றங்களைத் தடுப்பதிலும், காவல் நிலைய ஊழியர்களை விட, கிராம நிர்வாக ஊழியர்களே அதிக அக்கரை உள்ளவர்கள்/செலுத்த வேண்டியவர்கள். அதனால்தான், ஒவ்வொரு கிராமத்திற்கும், கிராம நிர்வாக ஊழியர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், காவல் நிலையங்ளோ பல கிராமங்களுக்கு ஒன்று என்ற அளவிலேயே இயங்குகிறது என்பதன் மூலம் கிராம நிர்வாகத்தின் அதிமுக்கியத்துவத்தை, எவரும் எளிதாக எடை போட்டு விடலாம்.
கிராமம் என்பது, நாம் எல்லோரும் மனதளவில் நினைப்பது போல குக்கிராமங்கள் மட்டுமே அல்ல. மாறாக, குக்கிராமங்கள் முதல் மாநகரங்கள் வரை உள்ள ஒவ்வொரு பகுதியும் கிராமங்களாக வரையறை செய்யப்பட்டு, ஒவ்வொரு கிராமத்தையும் சரியான முறையில் பராமரிக்க வழிகாட்டும் வகையில், “கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் குடிமக்கள் நடைமுறை நூல் என இரண்டு தொகுதிகள் (பாகங்கள்) உள்ளன”.
முதல் தொகுதியில் காவல் கடமை, நிலவரி வசூல், பல்வகைப்பட்டவை, மக்கள் நல்வாழ்வு  மற்றும் துப்புரவு, கொள்ளை நோய்கள் மற்றும் இதர நோய்கள், நச்சுக்கடி மற்றும் கொட்டுதல், நஞ்சிடுதல் மற்றும் தற்செயலாக நிகழும் விபத்து ஆகியவற்றைக் கையாள வேண்டிய விதம் குறித்த அறிவுறுத்தலும், இவ்வறிவுறுத்தல்களைச் செயற்படுத்துவதற்குத் தேவையான உரிய படிவங்களை இரண்டாவது தொகுதியிலும் அரசு தொகுத்துள்ளது.
ஆனால், இந்த இவ்விரு தொகுதி நூல்களையுமே, தமிழ்நாடு அரசு 1982-ஆம் ஆண்டுக்குப் பிறகு அச்சிட்டு விற்பனை செய்யவில்லை என்பதால், தற்போது பணியில் உள்ள கிராம நிர்வாக ஊழியர்களில் ஓரிருவரைத் தவிர மற்றவர்களிடம் இல்லைவே இல்லை என்று சொல்வதை  விட இப்படியொரு நடைமுறை நூல் இருக்கிறதா என என்னிடம், கேட்ட ஊழியர்களே அதிகம்.
அப்படி கேட்டவர்களுக்கெல்லாம் நகல் பிரதி எடுத்துக் கொடுத்து வந்தோம். தற்போது, இந்நூல் நம் குடிமக்கள் ஒவ்வொருவரின் கையிலும் இருக்க வேண்டும் என்பதற்காகவே மிகுந்த சிரமத்திற்கு இடையில், பொது மக்களின் நலன் கருதி முதல் தொகுதியை மட்டும் நூலாகவே வெளியிட்டு உள்ளோம்.  இந்த முதல் தொகுதியை ரூ-225 நன்கொடை செலுத்தி பெற விரும்புவோர் திரு.அய்யப்பன் +910842909190 அல்லது +919150109189 என்கிற உலாப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இந்த நூலின் ஒரு பிரதியாவது நமக்கு கிடைக்காதா என தேடிக் கண்டுபிடிக்கவே எனக்கு சுமார் மூன்று வருடம் ஆனது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! அந்த அளவிற்கு இப்புத்தகம் குறித்த தகவல் யாருக்கும் தெரியவில்லை. அப்படி தெரிந்தவர்கள் ரகசியம் காப்பது போல யார் கண்ணிற்கும் புலப்படாமல் பாதுகாத்து வருகின்றனர்.
இதன்படி, கிராமத்தை நிர்வகிப்பதற்கு என கிராம நிர்வாக அலுவலர், கிராம காவலர், கிராமப் பணியாளர் மற்றும் பாசனக் காவலர் என நான்கு ஊழியர்கள் நியமிக்கப்படுகிறார்கள். இதில் கிராம நிர்வாக அலுவலர்கள், அரசின் பிரதிநிதியாக முழு நேர காவல் ஊழியம் உட்பட பல்வேறு வேலைகளைச் செய்ய வேண்டியவர். மற்ற மூவரும் பகுதி நேர ஊழியர்கள் ஆவர். தஞ்சைப் போன்ற நெல் பயிரிடும் டெல்டா மாவட்டங்களில் பாசனக் காவலரை, தலையாரி என்பர்.
கிராமத்தின் மக்கள் தொகை, வருமானம், பாசன வசதி ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்த ஊழியர்களின் எண்ணிக்கை ஒன்றிரண்டு கூடுதலாக அல்லது குறைவாகவே இருக்கும்.
பொதுவாக ஒரு கிராமம் முதல் ஓரிரு கிராமங்கள் வரை, ஒரேயொரு கிராம நிர்வாக ஊழியர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மூவரும் கிராம நிர்வாக ஊழியரின் ஆலோசனைப்படி, தாம் நியமிக்கப்பட்டுள்ள வேலைகளைச் செய்யக் கடமைப்பட்டவர்களே தவிர, அவரின் வீட்டு வேலைகளைச் செய்ய கடன்பட்டவர் அல்ல என்பதும் தெளிவுபடுத்தப் பட்டுள்ளது. ஆனால், நிஜத்தில் இவர்கள் கடனைக் கடமையாகவும், கடமையைக் கடனாகவும் செய்பவர்கள் என்பது ஊரறிந்த ரகசியம்தான்.
கிராம நிர்வாக ஊழியர் என்றால், நினைத்த போது வேலைக்கு வருவதும், போவதும் பொது மக்களில் எவராவது சான்றிதழ் கேட்டு வந்தால், அதிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ள லஞ்சத்தைக் கவனிக்க வேண்டியதைக் கவனித்தால் கண்ணை மூடிக் கொண்டு கையெழுத்து போட்டுத் தருவது மட்டுமே பிரதானப் பணி என்கிற அளவிற்கு மிகவும் உயர்வானதொரு கடமைப் பணியை, மிகக் கீழ்த்தரமான கடமைப் பணியாக மாற்றி விட்டார்கள்.
இதற்கு மேலும், இவர்களை இப்படியே விட்டு வைக்காமல், குடிமக்களாகிய நாம்தான் நமக்காக அரசால் நியமிக்கப்பட்டுள்ள ஊழியர்களை வேலை வாங்க வேண்டும் என்ற கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் குடிமக்கள் நடைமுறை நூலின் நோக்கத்தின் அடிப்படையிலேயே இதனை எழுதுகிறேன். இனியும் நாம் இக்கடமையைச் செய்யத் தவறினால், நம் வீடு மட்டுமல்ல; நாடே நாசமாகி விடும்.
முழு நேர ஊழியர்களான கிராம நிர்வாக ஊழியர்களுக்கு, தமது ஊழிய வரம்புக்குள் எவ்வித குற்றமும் நடைபெறாமல் தடுப்பது, கிராமத்தில் நடமாடும் கொள்ளைக் கூட்டத்தினர், தப்பி வந்த கைதிகள், சட்டத்துக்குப் புறம்பான செயல் அல்லது பொருள் தயாரிப்பில்  ஈடுபடுவோர், மற்றும் சந்தேகத்திற்கு உரிய நபர்களைப் பற்றி தெரிய வரும் போது அவர்களைப் பற்றி விசாரணை செய்வது, தேவைப்பட்டால் காவல்துறைக்கும், சம்பந்தப்பட்ட நீதித்துறை நடுவருக்கும் தகவல் அளிப்பது உள்ளிட்ட குற்றங்களைத் தடுப்பது காவல்  கடமையாகவும்,
திடீர் மரணங்கள், அசாதாரண மரணங்கள், விபத்து மரணங்கள், விமான விபத்துக்கள் ஆகியவை நிகழும் போது உடனே அங்குச் சென்று அதற்கான காரணங்களை ஆராய்வது, பைத்தியக்காரர்கள் அல்லது தங்களைத் தாங்களே தற்காத்துக் கொள்ள இயலாதவர்கள் ஆகியோரைத் தம் பாதுகாப்பில் கொண்டு வருவது இதுபற்றி காவல்துறைக்கும், நீதித்துறைக்கும் தேவைப்பட்டால் தகவலை அளிப்பது பாதுகாப்பு கடமையாகவும்,
தான் ஊழியம் ஆற்றும் கிராமத்தில் நடக்க இருக்கின்ற திருவிழாக்களில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்கவும், தகாத சம்பவங்களைத் தடுக்கும் பொருட்டும் பதினைந்து நாட்கள் முன்பாகவே அது குறித்த தகவலை அருகில் உள்ள காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு அளிப்பது ஆகியன பாதுகாப்பை நிலைநிறுத்தும் கடமையாகவும்,
நீர் நில வரி வசூல், ஆக்கிரமிப்பு, பட்டா பதிவு, கிணறுகள், ஓடைகள், ஏரிகள் அரசு பொது கட்டிடங்கள், புராதன கட்டிடங்கள், புதையல்கள், கனிம வளங்கள், இதர அரசாங்கச் சொத்துக்கள், ஊராட்சி நிதிகள், கால்நடை பட்டிகள் & நோய்கள், பிறப்பு & இறப்பு புள்ளி விபரங்கள், இயற்கை இடற்பாடுகளால் ஏற்படும் போக்குவரத்து தடையை நீக்குதல், எடை அளவுகளை ஆய்வு செய்தல், அஞ்சல் துறைக்குத் தேவையான ஒத்துழைப்பை நல்குதல் உட்பட பல்வேறுபட்ட விடயங்கள் பல்வகை கடமையாகவும்,
தண்ணீர், கழிப்பிட பராமரிப்பு, குப்பை மேடுகள், இடுகாடுகள் & சுடுகாடுகள், இறந்த விலங்குகள், வாந்தி பேதி, மஞ்சல் காமாலை, மூளைக்காய்ச்சல், பிளேக், மலேரியா, வெறி நாய் கடி, பாம்புக்கடி, தேள் கொட்டுதல் உட்பட பல்வேறு விடயங்களைச் செம்மைப் படுத்துவது ஆகியன மக்கள் நல்வாழ்வு மற்றும் கிராம துப்புரவு கடமைகளாக, கிராம நிர்வாக ஊழியர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கின்றன.
இந்தக் கடமைகளை நிறைவேற்றும் பொருட்டே, “கிராம நிர்வாக ஊழியர்கள் பணி நியமன ஆணையில், எந்தக் கிராமத்தில் பணியாற்ற நியமிக்கப்படுகிறார்களோ அதே கிராமத்தில் வசிக்க வேண்டும்” என்ற கட்டுப்பாட்டின் கீழ்தான் பணியில் அமர்த்தப்படுகிறார்கள். ஒருவேளை இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிராமங்களுக்கு, நிர்வாக ஊழியராக நியமிக்கப்படும் போது, அதில் ஏதாவதொரு கிராமத்தில் வசிக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசின் 01-01-2011 தேதிய கணக்கீட்டின்படி, தமிழ்நாட்டில் 12,620 கிராமங்கள் உள்ளன. இதில் பணியாற்றும் பத்து சதவிகித கிராம நிர்வாக ஊழியர்கள் கூட அவர்களின் பொறுப்பு கிராமங்களில் வசிப்பதில்லை. கிராமத்தில் வசிக்க வேண்டியவர்கள் நகரத்தில் வசிக்கிறார்கள் என்றால், நகரத்தில் பணியாற்றுபவர்கள் கூட தங்களின் வசதிக்காக அடுத்தடுத்த நகரங்களிலும் வசிக்கும் கொடுமையும் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
இதற்கு அடிப்படை காரணமாக, கிராமத்தில் போதிய வசதியில்லை என்ற அற்ப காரணத்தையே பலரும் முன் வைக்கின்றனர். அப்படியானால், அக்கிராமத்தில் வசிப்பவர்கள் எல்லாம் சராசரி மக்கள் இல்லையா? பணி நியமன ஆணையைப் பெற்ற போது கிராமத்தில் தங்களுக்குப் போதிய வசதி கிடைக்காது என்பது தெரியாத அப்பாவிகளா இவர்கள்? ஒரு பேச்சுக்குத் தெரியாமல்தான் சேர்ந்தார்கள் என்றாலும் கூட, தெரிந்த பின் இந்த வேலை நமக்கு ஒத்து வராது என்று பணியை துறந்துவிட்டு வேறு வேலையைத் தேடிக் கொள்ள வேண்டியதுதானே?
இதற்கு வக்கில்லாதவர்கள், எப்படிப்பட்ட கிராமமாக இருந்தாலும் அங்கே தானே தங்கி ஊழியம் ஆற்ற வேண்டும்? மக்களின் வேலைக்காரர்களான இவர்களின் கூற்று, “சாமியே சைக்கிள்ல போகுதாம்; பூசாரிக்கு புல்லட் கேட்குதாம்!” என்ற கதையாகத்தான் இருக்கிறது.
இவர்களை நேரடியாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய வட்ட ஆட்சியர்கள் கூட, தாங்கள் எல்லாம் அரசு என்னும் ஒரு சாதி ஊழியர்கள் என்ற அடிப்படையிலும், தனது கையாலாகாத்தனத்தாலும் கண்டும் காணாமல் இருக்கின்றனர்.
இந்நூலின் பிரிவு 43-இல் கிராம நிர்வாக ஊழியர்களின் மீது சட்டப்படியான நடவடிக்கையை மேற்கொள்ளும் விதமான அறிவிப்பை எப்படி சார்பு (சேர்க்க) வேண்டும், அதற்கு அவர் எப்படி பதில் அளிக்க வேண்டும், அவர் மீதான வழக்கிற்கு அரசு ஆதரவு தருமா? என்பன போன்று குடிமக்கள் நடவடிக்கை எடுக்க தேவையான பல விடயங்கள்  அடங்கியுள்ளன.
உங்களுக்கு ரகசியம் ஒன்றைச் சொல்கிறேன் கேளுங்கள்:
ஓர் அரசு ஊழியர் தனக்கு தெரியாமல் தவறு ஏதும் செய்து விடக்கூடாது என்பதில் சட்டம் தெளிவாகவே இருக்கிறது. ஆனால், இந்தத் தெளிவு அரசு ஊழியர்கள் எவருக்குமே இருப்பதில்லை. நான் இப்படிச் சொல்வதில் உங்களுக்குச் சந்தேகம் இருந்தால், உற்றார், உறவினர் மற்றும் நண்பர்கள் என உங்களுக்குத் தெரிந்த அரசு ஊழியர்களிடமே உண்மையாக கேட்டுப் பாருங்கள். உங்களுக்குக் கிடைத்த தகவலை மறக்காமல், இக்கட்டுரைக்கான பின்னூட்டமாக பதிவு செய்யுங்கள்.
அதாவது ஒரு அரசு ஊழியர் செய்த தவறுக்காக அவர் மீது சட்டப்படியான அறிவிப்பு ஒன்றை நாம் அனுப்பினால், அதற்கு அவர் பதில் தர வேண்டும் என்றுதானே நினைப்போம். இது ஓரளவுக்குத்தான் சரி. பதில் கொடுப்பதில்தான் அவர்களுக்கு சிக்கலே இருக்கிறது. ஏனெனில், அவர்கள் நேரடியாக நமக்கு பதில் கொடுக்க முடியாது. மாறாக, நமது சட்டப்படியான அறிவிப்பையும், அதற்கு நமக்கு என்ன பதில் கொடுக்க வேண்டுமோ அதையும் எழுதி தனது மேல்நிலை ஊழியருக்கு உரிய முகப்பு கடிதத்துடன் அனுப்பி வைக்க வேண்டும். அதனைப் பெற்ற அந்த மேல்நிலை ஊழியர் அப்பதிலில் தேவையான திருத்தங்களைச் செய்து, மேலொப்பமிட்டுதான் நமக்கு அனுப்ப வேண்டும்.
ஆனால், இச்சட்ட விபரம் அரசு ஊழியர்கள் எவருக்குமே தெரிவதில்லை. ஆதலால், நேரடியாகவே வீரமாகவும், மிரட்டலாகவும் பதில் அனுப்பி, எடுத்த எடுப்பிலேயே வசமாக சிக்கிக் கொள்வார்கள். பின், ஆளை விட்டால் போதும் என காலில் விழுந்து மன்னிப்பு கேட்க கூட தயங்கமாட்டார்கள் என்பது எனக்கு பல அரசு ஊழியர்களிடம் இருந்து கிடைத்த அனுபவம்.
இந்த ரகசியத்திலும், ரகசியம் என்னவென்றால், இப்படியொரு சூழ்நிலை கீழ்நிலை ஊழியருக்கு நேரும் போது, மேல்நிலை ஊழியர் எந்த விதத்திலும் வக்காலத்து வாங்க முடியாமல் போய் விடும். அப்படி வக்காலத்து வாங்கினால், அவரது மேலதிகாரியிடம் அவர் சிக்க வேண்டியிருக்கும்.
நாமக்கல் மாவட்டத்தில் மக்களின் ஆட்சியராக இருந்த திரு.சகாயம் அவர்கள் சட்டத் தெளிவு உள்ளவர். அவரது அதிரடி சட்ட நடவடிக்கைக்குப் பயந்த கிராம நிர்வாக ஊழியர்கள், அந்தந்த கிராமங்களிலேயே தங்க ஆரம்பித்தார்கள். “மேயிற மாட்டை நக்கின மாடு கெடுத்த கதையாக”, கிராம நிர்வாக அலுவலர்களின் சங்கம் மக்களின் ஆட்சியருக்கு எதிராக போராட்ட களத்தில் குதித்ததால், மக்களும் வெகுண்டெழுந்து ஆட்சியரின் சட்டத்துக்கு உட்பட்ட நடவடிக்கைக்கு ஆதரவாக போராட்ட களத்தில் இறங்கி கிராம நிர்வாக ஊழியர்களையும், அவர்களின் சங்கத்தையும் பணிய வைத்தனர்.
தங்கம் செய்யாத வேலையைச் சங்கம் செய்யும் என்பது, சங்கத்தின் செயல் பாடுகளைப் பற்றி முழுமையாக ஆராய்ந்து அறியாதவர்களின் கூற்று. இன்றைய சங்கங்கள் எல்லாம் மற்றவர்களுக்கு (வெகுஜன மக்களுக்கு)ச் சங்கடம் தரும் வேலைகளைத்தான் செய்கிறது.
நம் தாத்தா மகாத்மா காந்தி அவர்கள் கூட, “எந்த நோக்கத்திற்காக சங்கம் தோற்று விக்கப்படுகிறதோ, அச்சங்கமே  முதலில் அந்நோக்கத்தை கெடுக்கும்” என தென்னாப்பிரிக்க சத்தியாகிரக நூலில் முன்மொழிந்து உள்ளார். எனது ஆய்விலும், இந்த உண்மையை ஆராய்ந்து அறிந்த பிறகே, தாத்தாவின் கூற்றை வழிமொழிய கடமைப்பட்டுள்ளேன்.
மக்களின் ஆட்சியர் இன்று மதுரையை ஆட்சி செய்ய இந்திய தேர்தல் ஆணையத்தால் நம்பிக்கையோடு அனுப்பப்பட்டு விட்டாலும் கூட, நாமக்கல் மாவட்டத்தில் அவரின் ஊக்கப் பயிற்சியாலும், தங்களின் தன்னார்வத்தாலும் சட்ட விழிப்பறிவுணர்வு தன்னார்வலர்கள் பலராலும், கிராம நிர்வாக ஊழியர்கள் இன்றும் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். ஆனால், மற்ற மாவட்டங்களில் இப்படிப்பட்ட கண்காணிப்புகள் எதுவும் பெரிதாக இருப்பதாக தெரியவில்லை.
நமது நாமக்கல் மாவட்டத்தைப் போலவே, அனைத்து மாவட்ட கிராமங்களிலும், கிராம நிர்வாக ஊழியர்கள், அந்தந்த கிராமங்களிலேயே தங்கி தங்களின் பணியை ஆற்ற வேண்டும் என்ற நோக்கோடு, அண்மையில் நாமக்கல் மாவட்டம் கபிலர் மலையைச் சேர்ந்த திரு.விவேகானந்தன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்து அதில் வெற்றியும் பெற்றதன் மூலம் இந்த விடயத்தைப் பட்டிதொட்டி எங்கும் பரவச் செய்துள்ளார்.
VAO-news
இதற்கு மேல், இதனைக் கண்காணித்து முன்னெடுத்துச் செல்லும் கடமை, ஒவ்வொரு கிராமத்திலும் வசிக்கும் நம்மைப் போன்ற தன்னார்வலர்களுடைய கடமையே ஆகும். இவ்விடத்தில் இப்படிப்பட்ட கடமை நிகழ்வொன்றை சொல்வது உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
சுமார் நான்கு வருடங்களுக்கு முன்பு கோவை தெலுங்குபாளையம் பகுதியில் பொது கால்வாயை ஆக்கிரமிப்பு செய்த பின், அதனை வீட்டோடு கூடிய சுற்றுச்சுவர் மூலம் தன்வசப்படுத்தும் முயற்சி நடந்ததை அடுத்து, அப்பகுதியில் வசிக்கும் சட்ட விழிப்பறிவுணர்வு தன்னார்வலர் திரு.கண்ணன் என்பவர் அதனைத் தடுக்க கோரி கிராம நிர்வாக ஊழியரிடம் பிரிவு 2-இன்படி மனு ஒன்றைக் கொடுத்தார்.
அதாவது இந்தப் பிரிவின்படி, ஒவ்வொரு கிராம நிர்வாக ஊழியரும், தாங்கள் வேலை செய்யும் கிராமத்தில் குற்றம் ஏதும் நடக்காத வண்ணம் தடுத்து நிறுத்த வேண்டும். குற்றம் என்பது குற்றவியல் என்பதால் அதையே உரிமையியலில் பிரச்சினை என நாம் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், உங்களுக்கு இப்படி விளக்கிச் சொல்லுவது போல, மனுவில் சொல்வது கிடையாது என்பதால், அவர்கள் என்னமோ, ஏதோ என பயப்படுவார்கள்.
அதைப் படித்துப் பார்த்த அவ்வூழியர், அப்பிரிவின் வில்லங்க விளக்கம் தெரியாததால், கொஞ்சமும் பொறுப்பில்லாமல், இதெல்லாம் என் வேலை கிடையாது. நீங்க நீதிமன்றத்துல கேஸ் போட்டு ஸ்டே வாங்கி தடுத்து நிறுத்திக்குங்கோ என்று கூறி மனுவைத் திருப்பி தந்து விடவே, அடுத்து என்ன செய்யலாம் என ஆலோசனைக் கேட்டார். மனுவை வாங்க மறுத்ததால் கூரியர் மூலம் சார்பு செய்யப்படுகிறது என மனுவிலேயே குறிப்பு எழுதி அனுப்பி வைக்கச் சொன்னேன். அவரும் அதன்படி செய்து விட்டார்.
அடுத்த நாள் காலை பத்து மணிக்கெல்லாம் கூரியர் கிடைத்ததோ இல்லையோ, சட்டப்பிரிவு எல்லாம் போட்டு இருக்கிறதால, நமது வேலைக்கு வேட்டு வந்து விடும் என அவ்வூழியர் விழுந்தடித்துக் கொண்டு ஆக்கிரமிப்பு செய்த இடத்தில் ஆஜரானதோடு, இனி இது போன்ற சட்ட விரோத ஆக்கிரமிப்பு செயல்களில் ஈடுபடமாட்டேன் என எழுதியும் வாங்கி கொண்டார்.
வேறு வழியில்லாமல் ஆக்கிரமிப்பு ஆசையில் ஏற்கனவே இருந்த இடித்து தள்ளிய வீட்டு சுற்றுச்சுவரை மீண்டும் அதே இடத்தில் கட்டும்படியானது. வேறு வேலையாக திருப்பூர் வரை சென்ற போது, இவ்விடத்தை பார்க்க வேண்டும் என்பதற்காகவே சென்று பார்த்தேன். ஆக்கிரமிப்பு செய்ய இருந்த ஒரு பகுதி சுற்றுச்சுவர் மட்டும் புதிதாக எழுப்பப்பட்டு சுண்ணாம்பு கூட அடிக்காமல் காட்சியளித்தது எனக்கு கண்கொள்ளா காட்சியாக இருந்தது.
சட்ட விழிப்பறிவுணர்வோடு, இப்படி எளிதாக ஒரு நாள் பொழுதிற்குள் காரியத்தைச் சாதிப்பதை விட்டு விட்டு, தலைமுறை தலைமுறையாக வழக்கை நடத்திக் கொண்டிருக்கும் மக்களை என்னவென்று சொல்வது? இதனைப் படிக்கும் நீங்கள்தான் எப்படியெல்லாம் சட்டம் அருமையாக இருக்கிறது என ஊற்றார், உறவினர் மற்றும் நண்பர்களுக்கெல்லாம் எடுத்துச் சொ(செ)ல்லவும் வேண்டும்.
இப்படி சட்ட விரோத சம்பவங்கள் ஒவ்வொன்றுக்குமே, நாட்டில் ஏதாவதொரு இடத்தில்  திட்டம் போட்டுதான் நிறைவேற்றப்படுகின்றது. இதேபோல, திட்டங்களை நிறைவேற்றிய பின், நாட்டின் ஏதாவதொரு இடத்தில்தான் தங்க வேண்டியுள்ளது என்கிற எதார்த்த நிலையில், கிராம நிர்வாக ஊழியர்கள் தத்தமது ஊரிலேயே தங்கி, தங்களுக்குச் சட்டப்படி விதிக்கப்பட்டுள்ள கடமைகளை ஆற்றினாலே, சட்ட விரோத செயல்கள் பலவற்றைத் தடுத்து விடலாம்.
இதேபோல், கிராமத்தில் பக்கத்து பக்கத்து வீட்டிற்கோ அல்லது தெருவிற்கோ பிரச்சினை ஏற்படும் போது, அதனைச் சட்ட முறையில் தீர்த்து வைக்க வேண்டிய கடமைப் பொறுப்புள்ள கிராம நிர்வாக ஊழியர்கள் ஒரு தரப்பிடம் லஞ்சப்பிச்சை பெற்றுக் கொண்டு ஒரு தரப்பாக நடந்து கொள்வது, சான்றிதழ் என்ற பெயரில் கண்மூடித்தனமாக எதையாவது எழுதி கொடுத்து அநீதி இழைப்பது போன்ற செயல்களில் ஈடுபடாதோர் மிக மிக குறைவே.
அரசு ஊழியர்களின் அலட்சிய செயல்களால் பாதிக்கப்பட்ட மக்களாகிய நாம் நமக்குள் மட்டுமே சண்டை போட்டுக் கொண்டிருக்கிறோமே ஒழிய, அதனைத் தீர்த்து வைக்க வேண்டிய அரசு ஊழியர்களை விட்டு விடுகிறோம். இது சட்டப்படியும், சம தர்மப்படியும் முற்றிலும் தவறு.
நமது பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள நீதிமன்றத்தை நாடும் போது, கிராம நிர்வாக அதிகாரி மட்டுமல்லாமல், சம்பந்தப்பட்ட எந்த அதிகாரி மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்றாலும், நம்மிடம் இதுபற்றிய விழிப்பறிவுணர்வு இன்மையால் யாரும் அவ்வளவாக எடுப்பதில்லை என்பதே அவ்வூழியர்களின் அலட்சியப் போக்கு மற்றும் அட்டூழியங்களுக்கு அடிப்படை காரணமாக இருக்கிறது.
ஆம்! இந்திய தண்டனைச் சட்டம் 1860-இன் பிரிவுகள் 119-இன்படி, குற்ற நிகழ்வைத் தடுக்க கடமையுள்ள அரசு ஊழியர் தடுக்க முயலாததால் குற்றம் நிகழ்ந்தால், அக்குற்ற தண்டனையில் பாதி முதல் பத்து ஆண்டுகள் வரையிலும் தண்டனை கிடைக்கும். சட்டப்படி ஆற்ற வேண்டிய கடமையைச் செய்யாமல், அதிலிருந்து தவறும் போது பிரிவு 166 இன்படி, ஒரு வருடம் வெறுங்காவல் தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.
மேலும், துன்பம் இழைக்க வேண்டும் என்ற கெட்ட எண்ணத்தோடுச் சட்டத்திற்கு உட்படாத ஆவணத்தைத் தயார் செய்யும் போது பிரிவு 167 இன்படி, மூன்று வருட வெறுங்காவல்  அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும் என சட்டம் அரசு மற்றும் பொது ஊழியர்களுக்கு அறிவுறுத்தினாலும், இவைகள் குறித்த அறிமுகம் நமக்கு இல்லாததால் அரசு ஊழியர்களிடம் அல்லோலப்படுகின்றோம்.
எனவே, அறிவோம் அரசு ஊழியர்களின் சட்டக் கடமைகளை! அறிவிப்போம் அவர்களின் சட்ட விரோத செயல்பாடுகளின் விளைவுகளை! அப்படியும் திருந்தவில்லையா, உரிய தண்டனைக்கு ஆளாக்கி, நியாயம் பெறுவோம்; நிம்மதியாய் வாழ்வோம்!

0 Add your Comments/Feedback:

Popular Posts

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியம் உணர்ந்து இந்த வலைப்பூவிற்கு வருகை தந்துள்ள உங்களை வருக! வருக!! என அன்புடன் வரவேற்று பயன் பெறுக! பெறுக!! என வாழ்த்துகிறேன்.
 photo Indian_Flag_Pole.gif

Social Media's

Total Pageviews

Labels

Flash Labels by Blogger Widgets

Unordered List

Blog Archive

Followers

 photo Animation4.gif
  • தேர்தல் விழிப்புணர்வு...
    08.08.2010 - 3 Comments
    அனைவரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டியதன் (அ)வசியம் குறித்து 10-04-2009 தேதியன்று தினமணி நாளிதழில் எழுதிய…
  • Neethiyaithedy Book
    10.03.2008 - 4 Comments
    Pleading in courts of law is as easy as having discussion with members of the family! We are living around…
  • No law, No life. Know law, know life!
    10.03.2008 - 1 Comments
    சட்டம் இல்லாமல், வாழ்க்கை இல்லை. சட்டத்தைத் தெரிந்து கொள்ளுங்கள், வாழ்க்கையைப் புரிந்து கொள்ளுங்கள்! விசாரணை…
  • 09.04.2015 - 0 Comments
    Advanced legal study, Legal study guides, Law librarian, Legal custody, Legal awareness…
  • பச்சைதான் எனக்கு புடிச்ச கலரு!
    18.04.2015 - 0 Comments
    ஓர் ஆவணத்தில், சட்டப்படி சான்றொப்பம் இட வேண்டியதாக இருக்கின்ற போது, அந்த ஆவணத்தை எழுதியவர், அதனை தானே…
Related Posts Plugin for WordPress, Blogger...