ஓர் ஆவணத்தில், சட்டப்படி சான்றொப்பம் இட வேண்டியதாக இருக்கின்ற போது, அந்த ஆவணத்தை எழுதியவர், அதனை தானே எழுதியதாக செய்யும் ஏற்புரையானது அவரை பொறுத்தமட்டில் போதுமான நிரூபணம் ஆகுமென இந்திய சாட்சிய சட்ட உறுபு 70 அறிவுறுத்துகிறது.
இதன் விரிவான பொருள் விளக்கமாவது, அதாவது, எழுத்து மூலமாக உள்ள ஓர் ஆவணத்தில் சட்டப்படி சான்றொப்பம் இருக்க வேண்டும். ஆனால், அந்த ஆவணத்தை எழுதியவர், அதனை தானேதன் கைப்பட எழுதியதாக அல்லது தான் சொல்லச்சொல்ல வேறொருவர் எழுதியதாகவும் அல்லது தட்டச்சு செய்ததாகவும்,
அதனைப்படித்துப் பார்த்து சரியாக இருக்கிறது எனவும், அந்த ஆவணத்திலேயே குறிப்பிட்டு அந்நபர் செய்யும் ஏற்புரையுடன் கூடிய கையொப்பமானது, அவரைப் பொறுத்தமட்டில் வேறு எவ்விதத்திலும் நிரூபிக்க தேவையில்லாத, போதுமான நிரூபணமாகும்.
ஆம், இதன்படிதாம் நம்மில் இருந்து குடியரசுத் தலைவர் வரை எல்லோருமே கையெப்பம் போடுகிறோம். கையெழுத்து போட தெரியாதவர்கள் கைரேகையை பதிக்கிறோம். இந்த கையொப்பமும், கைரேகையுமே; சான்றொப்பமும் ஆகும். எப்படி?
நாமே கையால் எழுதும் அல்லது நம் சார்பாக வெறொருவர் எழுதும் அல்லது தட்டச்சு செய்யும் ஆவணத்தில் நாம் கையெழுத்திட்டாலோ அல்லது கைரேகையை பதிவு செய்தாலோ போதும்.
சான்று உறுதி எனப்படும் நோட்டரி பப்ளிக் உட்பட வேறு யாரிடமும் சான்றொப்பம் வாங்க வேண்டிய அவசியம் இல்லை.
இதேபோல், நாம் கையெழுத்திட வேண்டாத ஓர் ஆவணத்தில், அதனை நாம்தாம் கொடுத்தோம் என்பதற்கு அடையாளமாக அதில், நாம் கையெழுத்திட்டு அல்லது கைரேகையை பதித்து கொடுத்தலுக்கு பெயரே சான்றொப்பம்.
இந்த சட்டம் 1872 ஆம் ஆண்டு முதல் அதாவது சுமார் 142 வருடங்களாக அமலில் இருந்தாலுங்கூட, இதுபற்றி மத்திய அரசுக்கு இன்றுதாம் கொஞ்சம் தெரிந்திருக்கிறது. இந்த சட்டப்பிரிவின் சங்கதிகள் தெரியாமத்தான், சம்பிரதாய கூத்தாடிகள் போலவே கூத்தடிக்குறாங்க!
உயிரோடு இருந்த ஒருவர் இறந்து விட்டார் என்று நாமே உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். சந்தேகத்தை நிவர்த்தி செய்வதற்காகவோ அல்லது சாட்சி சொல்வதற்காகவோ சட்டப்படி மருத்துவர் ஒருவர் உறுதிப்படுத்த வேண்டும். ஆனால், ஒருவர் உயிரோடு இருக்கிறார் என்பதை அந்நபரே உறுதிப்படுத்தினால் போதும்.
ஆமாம், நீங்கள் உயிரோடு இருக்கிறீர்கள் என்பதை நீங்கள் சொன்னாலே போதும். நான் உட்பட வேறு யாரும் சொல்ல வேண்டிய அவசியமேயில்லை. ஏனெனில், உண்மையில் உயிரோடு இல்லாத நீங்கள், உயிரோடு இருக்கிறேன் என்று பொய்ச்சொல்ல முடியாது அல்லவா, அவ்வளவே!
நோட்டரி சட்ட விதிகளின்படி, நாம் கொடுக்க வேண்டிய பனிரெண்டு ரூபாய் கூலியை விட கூடுதலாக பெற்றுக் கொண்டு, பொய்ச்சான்று ஒப்பமிடும் இரண்டாந்தர, மூன்றாந்தர அரசூழியர்கள் மற்றும் நோட்டரி பொய்யர்களே பச்சை மையில், சட்டப்படியான சம்பிரதாய ஒப்பமிடும் போது…
முதல்தர முதலாளி சான்றாளர்களான நாம், இந்திய சாட்சிய சட்ட சான்றொப்பாளர்களாக அதே சட்ட சம்பிரதாய பச்சை மையில் ஒப்பமிட என்ன தடை இருக்க முடியும்; இனியும் ஏற்படுத்த முடியும்!
ஆதலால், அவர்கள் மாற்றிக்கொள்ளாத வரையில், எந்தவொரு ஆவணத்தில் கையொப்பம் இட நேர்ந்தாலும், ‘கையொப்பத்தை மட்டும் பச்சை மையில் போடுங்கள்; கைரேகையாக இருந்தாலும் பச்சையிலேயே பதியுங்கள்; தனி முத்திரையை(யும்) பதியுங்கள்!!’
கையொப்பம் தவிர, மற்றபடி கையால் எழுதினால், அநீதிக்கு எதிரான செய்திகளை கருப்பு நிற மையிலும், மற்ற செய்திகளை நீல நிறத்திலும் எழுதுங்கள். கணினியில் தட்டச்சு செய்து பிரதி எடுப்பதாக இருந்தால், உங்களின் வசதியைப் பொறுத்தும், சொல்லும் செய்திகளைப் பொறுத்தும் பல்வேறு நிறங்களை தேர்வு செய்து கொள்ளுங்கள். இவைகள் நமது வெற்று சம்பிரதாயங்கள் அன்று. நிறங்கள் குறித்த ஆராய்ச்சியின் நிஜங்கள்.
பச்சை : மனதிற்கு தன்னம்பிக்கையையும், எதையும் தாங்கும் மனோபலத்தையும் தருகிறது.
நீலம் : மகிழ்ச்சியின் தூதன். இந்த நிறத்தை விரும்புகிறவர்கள் மகிழ்ச்சியானவர்கள்.
கருப்பு : வருத்தம், சோகம், எதிர்ப்பு.
இயற்கை என்றாலே பச்சை. அதில் ஆங்காங்கே, அவ்வியற்கையே விரும்பும் வேறுபல நிறங்கள். பகலில் வானின் வண்ணம் வெளிர்நீலம். கருப்பு நிறத்தை அளவாகவே காணவேண்டும் என்பதற்காகவே, இரவில் தூக்கம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இதுவே, எல்லா உயிர்களுக்கும் பொதுவான அடிப்படையே என்றாலும், மனிதர்களில் சிலருக்கு அவரவர்களின் பகுத்தாராயும் அறிவாற்றலைப் பொறுத்து மாறுபடலாம்.
ஆகவே, வண்ணமே எண்ணத்திற்கான அடித்தளம் என்பதால், இனி எண்ணம்போல் வாழ்க்கை என்று யாருக்கேனும் அறவுரை சொல்ல நேர்ந்தால், வண்ணம்போல் வாழ்க்கை என பொருத்தமாகவே சொல்லுங்களேன்!
எனவே, நமது விருப்பத்திற்கு மாறாக, குறிப்பிட்ட வண்ணத்தைதாம் பயன்படுத்த வேண்டும் என்பது, இயற்கை நியதியை மீறிய செயலே.
இனியாவது, ஓர் அசல் சான்றின் மீது, ‘இது அசல் சான்றுதான் என சான்று வழங்க’, அச்சான்றை உருவாக்கியவரைத் தவிர, வேறு யாருக்கேனும் தகுதியிருக்க முடியுமா… இருக்க முடியும் என்றால், முதலில் நீங்கள் செலவு செய்யும் ஒவ்வொரு பணத்தின் மீதும், நீங்களே சான்றொப்பமிட்டு கொடுங்கள். அப்போது மட்டுமே அப்பணம் அசலானதாகும்.
நீங்களே இந்த அரசு ஊழியத்தில் நியமிக்கப்பட்டு உள்ளீர்கள் என அரசு ஊழியர்களையும், தீர்ப்பை எழுதினீர்கள் என நிதிபதிகளையும், வேறொருவர் உறுதிப்படுத்தி சான்றை வழங்க வேண்டுமென கேளுங்கள். சான்று உறுதி குறித்த சர்ச்சைகள் சரியாகிவிடும்.
இப்படித்தான், நான் கடந்த பத்து வருடங்களாக சாதாரண குடிமகனில் ஆரம்பித்து, குடியரசுத் தலைவர் வரைக்கும் அனுப்பும் ஆவணங்களில் பச்சையில் கையொப்பமிட்டும், சான்றொப்பமிட்டும் வருகிறேன்.
சட்ட விழிப்பறிவுணர்வில் தெளிவான வாசகர்கள் பலரும் இப்படித்தாம் கையொப்பமிட்டு வருகிறார்கள். இப்ப நீங்க..!?
0 Add your Comments/Feedback:
Post a Comment