கடமையைச் செய் !
பலன் கிடைக்கும்!!
உலகில் வாழும் உயிரினங்களிலேயே மனிதன் மட்டுமே ஆறறிவு அல்லது சிந்தனையறிவு அல்லது பகுத்தறிவு என்கிற பெயரால் சுயநலம் மிக்கவனாகவும் மிகுந்த எதிர்பார்ப்பு உடையவனாகவும் அதீத ஆசைகளை கொண்டவனாகவும் இருக்கிறான்.
இதனால் தன்னிலை மறந்து தான்தோண்றித்தனமாக செயல்பட்டு இயற்கைக்கே துன்பத்தை விளைவித்துக் கொண்டிருக்கிறான். அதனால்தாம் அவனும் துன்பத்தில் உழன்று கொண்டிருக்கிறான்.
தங்களின் உரிமைக்காக போராடும் மனிதன் தனது கடமை என்னவென்பதை நினைத்துக் கூட பார்ப்பதில்லை. போராடுபவர்கள் எல்லாம் உரிமைக்காகத்தான் போராடுகிறார்களே ஒழிய ஒருபோதும் கடமைச் செய்கிறேன் என போராடுவதில்லை.
இதற்கு தங்களின் தத்துவமாக, கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே என்று பகவத்கீதை சொல்வதாகவும் சொல்கிறார்கள். இதனையே வேதவாக்காக எடுத்துக் கொள்ளும் அம்(ம)(மா)க்கள், பலனை எதிர்பார்க்காது ஒன்றை எதற்காக செய்ய வேண்டும் என்கிறார்கள். நான் சட்டத்தையும், சமூகத்தையும் ஆராய்ந்துள்ளேனே தவிர, பகவத்கீதையை அடியெடுத்தும் பார்த்ததில்லை.
ஆதலால், உண்மையில் இப்படித்தான் சொல்லப்பட்டுள்ளதா என்பதும் தெரியாது. இப்படி சொல்லப் பட்டிருந்தால், அது எந்த உள் அர்த்தத்தில் சொல்லப்பட்டிருந்தாலும் தவறு. வெளிப்படையாய் சொன்னாலே விளங்காதவர்கள் பலர் இருக்க, இனிமேலும் உள் அர்த்தத்தோடு சொல்லி, உண்மையை ம(ற)(றை)க்கவும் வேண்டாமே!
ஒவ்வொரு செயலுக்கும், அச்செயலின் நன்மை, தீமை என்கிற தன்மையைப் பொறுத்து அதன் விளைவு, லாப அல்லது நட்டம் நிச்சயம் உண்டு என்பதை அறியாதார் யாருமே இருக்க முடியாது. எனவே,
கடமையைச் செய்தால் பலன் கிடைக்கும்!கடைமையைச் செய்தால் பாவம் கிடைக்கும்!!
என்பதும், இவைகளை எவரும் எப்படியும் பெறாமல் இருக்க முடியாது என்பதுமே முற்றிலும் சரி.
கடமை என்பது மிகவும் உயர்வான செயல் என்றும், கடைமை என்பது மிகவும் கேவலமான செயல் என்றும் பொருள்படும்.
சமைத்தால்தான் சாப்பாடு. வேலைப் பார்த்தால்தான் கூலி. இதில் சமைப்பதும் வேலைப் பார்ப்பதும் கடமை. இதன் விளைவாக கிடைக்கும் சாப்பாடும் கூலியும் தானாகவே கிடைக்கும் உரிமை.
இதனை உணராமல் எல்லோருமே உரிமைக்காக போராடிக் கொண்டிருந்தால் உரிமை எப்படி கிடைக்கும் ஓட ஓட விரட்டினாலும், ஒருபோதும் அகப்படாது.
ஒரு குடும்பத்தில் தந்தை என்கிற ஒருவர் வேலை பார்த்து மனைவி மக்கள் என பலர் ஆரோக்கியமாக வாழ பார்க்கிறோம். இதேபோல தாய் சமைத்து கணவன் மக்கள் என சாப்பிட்டு ஆரோக்கியமாய் வாழப் பார்க்கிறோம். ஒருவர் கடமையைச் செய்தாலே, பல பேர் பலனடையும் போது, ஒவ்வொருவரும் தத்தமது கடமையைச் செய்ய ஆரம்பித்து விட்டால், உரிமைக்கு பஞ்சமேது?
ஆனால், ஒருவரது கடமை தன்னைச் சேர்ந்தவர்கள் என்கிற சுய நலத்தோடே பெரும்பாலும் நின்று விடுகிறது.
இதையும் தாண்டி நமக்கிருக்கும் இச்சட்ட விழிப்பறிவுணர்வு, நம்மையும், நமது குடும்பத்தையும் காக்க போதுமானது என்று மட்டுமே கருதாமல், உலக சமுதாயத்தையே காக்க வேண்டும். இதுவே நமது கடமை என்று நான் கருதியதால்தாம், இன்று இத்தளத்தை நீங்கள் பார்க்க முடிகிறது.
இனி வக்கீல்கள் இல்லாமல், நமக்காக நாமே வாதாடிக் கொள்ளலாம் என்கிற தெளிவையும் பெற முடிகிறது.
இதெல்லாம் சரிதாங்க! நாங்களும் உங்களைப் போல, நாட்டுக்கு எதையாவது செய்ய நினைக்கிறோம். அப்படி சில சமயங்களில் செய்த போது, நீ யார் இதை கேட்க என்று கேள்விகள் பல கேட்டு எங்களின் கடமையை அதிகாரம் மிக்கவர்கள் தடுத்து விட்டார்கள் அல்லது சிக்கலில் மாட்டி விட்டார்கள் என்று கூட சொல்வீர்கள்.
வெகுசிலர் இதையெல்லாம் விட மேலே ஒருபடியாக, நல்லதைச் செய்ய வேண்டுமானால், அதற்கென்று அதிகாரம் இருக்க வேண்டும் என்று அதிகார ஆசையை நிறைவேற்றிக் கொள்ள அடிகோல்வார்கள்.
இப்படிச் சொல்லிதாம், ஆளுக்காளு இயக்கம், அறக்கட்டளை, சங்கம், மன்றம் என்று பல்வேறு பெயர்களில் அமைப்புகளை தொடங்கி, தெருவுக்கு தெரு என்பது போய், வீட்டுக்கு வீடு என பரவி, இப்போது விட்டுக்கு ஓரிரு அமைப்புகள் வந்து விட்டன. இவைகளுக்கெல்லாம் முதற்படியும், முன்னோடியும், அரசியல் கட்சிகளின், காட்சிகள்தாம்.
இவைகள் அனைத்தாலும்தாம், சக்தியோடும், சந்தோசத்தோடும், ஒன்றுபட்ட உணர்வோடும் இருந்த மக்கள், தங்களின் சக்தியை, சந்தோசத்தை, சகோதர உணர்வை இழந்து சந்தியில் நிற்க ஆரம்பித்து, இப்போது முச்சந்தியில் நிற்பதற்கு அடிப்படை காரணம் என்றால், சிறிதும் மிகையில்லை.
இவைகளுக்கெல்லாம் ஒரே அடிப்படை காரணம், சட்ட விழிப்பறிவுணர்வு இன்மையே!
ஆம்! நமது இந்திய சாசனக் (இந்திய அரசமைப்பு) கோட்பாடு 51அ(ஒ) இல், ஒவ்வொரு குடிமகனின் கடமை என்று பத்து கடமைகள் விதிக்கப்பட்டுள்ளது. இவைகள் குறித்த விழிப்பறிவுணர்வு நம் ஒவ்வொருவருக்கும் இருந்திருந்தால், அநியாயங்களை செய்திருக்க மாட்டோம்; அப்படிச் செய்வோரை வேடிக்கை பார்த்திருக்கவும், இனியும் பார்த்துக் கொண்டிருக்கவும் மாட்டோம்.
நமக்கு விதிக்கப்பட்டுள்ள கடமைகள் குறித்து சென்னையைச் சேர்ந்த சமூக சேவகர் திரு.த.மணி அவர்கள் ரத்தினச் சுருக்கமாக சொல்லியுள்ள விபரங்களை ஒலி ஒளிப்பதிவாக கேட்க விரும்பினால் இங்கு கேட்கலாம். இதையே சற்று விரிவாகச் சொல்கிறேன்.
அ) இந்திய சாசனத்துக்கு கட்டுப்பட்டு நடக்கவும், அதன் நோக்கங்களையும், அதன்படி உருவாக்கப்பட்டுள்ள அமைப்புகளையும், தேசிய கொடி மற்றும் தேசிய கீதத்தை மதிக்கவும்,ஆ) நமது தேசத்தின் விடுதலைப் போராட்டத்திற்கு தூண்டுகோளாக அமைந்த புனிதமான அகிம்சை கொள்கைகளை போற்றவும், பின்பற்றவும்,இ) இந்தியாவின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும், ஒப்புயவற்ற தன்மையை நிலை நிறுத்தவும், பாதுகாக்கவும்,ஈ) தேசத்தை பாதுகாக்கவும், அழைக்கும் போது, தேசத்திற்கு சேவை செய்ய முன்வரவும்,உ) சமயம், மொழி, பிராந்தியம் ஆகிய குறுகிய பிரிவுகளை தாண்டி, இந்திய மக்களிடையே சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றில் ஒன்றுபட்ட உணர்வை உண்டாக்கவும், பெண்களின் கண்ணியத்தை களங்கப்படுத்தும் பழக்க வழக்கங்களை தவிர்க்கவும்,ஊ) நமது விலை மதிப்பற்றதும், பல்வகைப்பட்டதும், தொன்றுதொட்டு வருவதும் ஆன பண்பாடுகளை மதிப்பதற்கும், காப்பதற்கும்,எ) காடுகள், ஏரிகள், ஆறுகள் உட்பட இயற்கை ஆதாரங்களை மேம்படுத்தவும், விலங்குகள் உள்ளிட்ட உயிரினங்கள் மீது பரிவு காட்டவும்,ஏ) விஞ்ஞான ரீதியான அணுகு முறை, மனிதாபிமானம், ஆராய்வு, சீர்த்திருத்தம் ஆகியற்றை வளர்ப்பதற்கும், காப்பதற்கும் தேவையான ஊக்கத்தை அளிக்கவும்,ஐ) பொதுச் சொத்துக்களை காப்பதற்கும், வன்முறையில் இருந்து விலகவும்,ஒ) நாடு முன்னேற்றப்பாதையில் முனைந்து வெற்றி பெறத் துறைகள் அனைத்திலும், குடிமக்கள் ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையிலும், கூட்டாகவும் முயற்சி செய்வதை கடமையாக கொள்ள வேண்டும் என அறிவுருத்தல், அல்ல அல்ல வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இந்திய சாசனம் அமலுக்கு வந்த 26-01-1950 இவ்வேண்டுகோள்கள் நமக்கு வைக்கப்படவில்லை. மாறாக, 1976 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட 42 திருத்தத்தின் மூலமாகவே வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆக, கடமையைச் செய்யாமல், உரிமையைப் பெற முடியாது என்கிற எதார்த்தம், இந்திய சாசனத்தை வரைவு செய்த, அதன் மேல் விவாதம் செய்த, முன் மொழிந்த, வழி மொழிந்த யாவருக்குமே அறிவுப்பூர்வமாக தெரியவில்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகி விட்டது.
இத்தோடு 2002 ஆம் ஆண்டில், மேற்கொள்ளப்பட்ட 86 வது திருத்தத்தின் மூலம்…
ஓ) 6 முதல் 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை படிக்க வைக்க வேண்டும் என அக்குழந்தைகளின் பெற்றோர்களுக்கும், பாதுகாவலர்களுக்கும் வேண்டுகோள் வைக்கப்பட்டுள்ளது. ஆதலால், நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் கூட, இக்கடமைகளை செய்யக் கூடாது என, ஒருகாலும் உங்களுக்கு தடை விதிக்க முடியாது.
மேலும், ஒரு பதவியின் பெயரால் அதிகாரத்தில் உள்ள ஒவ்வொருவரும், அப்பதவிக்கு உரிய வரையறுக்கப்பட்ட அதிகாரத்தை தவிர, வேறு அதிகாரங்களை செலுத்த முடியாது. ஆனால், வேண்டுகோளை (கடமையை) இயல்பான அதிகாரமாக பார்க்கும் நாம், நமக்கு விருப்பமான ஒன்றையோ அல்லது பலவற்றையோ, பலவாறாக தேர்வு செய்து பங்கேற்க முடியும் நமக்கே கிடைத்துள்ள மாபெறும் சிறப்பு அதிகாரம்.
இக்கடமைகளை நாம் செவ்வனே செய்தால், அனைவரும் நமக்கு வணக்கம் செலுத்துவார்கள். இல்லையெனில், அனைவருக்கும் நாமே வணக்கம் செலுத்த வேண்டியிருக்கும்.உண்மையில், கெடுதலை செய்து விட்டு, அதிலிருந்து தப்பிக்கத்தான் அதிகாரம் தேவை. நல்ல செயல்களை செய்வதற்கு எந்தவித அதிகாரமும் தேவையில்லை. மாறாக, செய்ய வேண்டும் என்கிற தீர்க்கமான எண்ணம் ஒன்று மட்டும் இருந்தால் போதும். எதையும் செய்து முடிக்கத் தேவையான எல்லாமே தானாக வந்து சேரும்.
உயர் பதவியில் உள்ளோரின் அதிகாரத்தை, தன் வசமே தக்க வைத்துக் கொண்டுள்ள இந்திய சாசனம், ‘‘உங்களின் கடமையையும் ஆற்றுங்கள் என நமக்கும் இப்படி வேண்டுகோள் விடுத்துள்ளதை கடனாகவோ அல்லது கடமையாகவோ கருத கூடாது. மாறாக, நமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரமாகவே கருதி, நாட்டு நலனுக்கான நற்காரியங்களை கனகட்சிதமாக முடிக்க வேவ்வேறு விடயங்களில் விருப்பமுள்ள உங்களை அன்போடு அழைக்கின்றோம்’’.
இதன் அடிப்படையில்தாம், அனைத்து அநியாயங்களையும் அடக்கும் திறன் கொண்ட சட்டத்தையும், அதனை கையாளாகத் தனத்தோடு கையாளும் கயவர்களையும் களையெடுத்து, கலையழகு மிக்க செயலாக்கவே, இச்சட்ட விழிப்பறிவுணர்வு அதிகாரக் கடமைப்பணியை மேற்கொண்டுள்ளோம்.
0 Add your Comments/Feedback:
Post a Comment