Warrant Balaw Blog - वारंट बाला चिट्ठा

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியம் உணர்ந்து இந்த வலைப்பூவிற்கு வருகை தந்துள்ள உங்களை வருக! வருக!! என அன்புடன் வரவேற்று பயன் பெறுக! பெறுக!! என வாழ்த்துகிறேன்.

Neethiyaithedy

,

,

..

..

பொதுவுடைமை நூல்கள்

இந்தியாவில் மத்திய அரசும், மாநில அரசுகளும் தத்தமது அதிகாரங்களுக்கு உட்பட்ட சட்டங்களை இயற்றுகின்றன. மேலும், இவ்விரண்டு அரசுகளும் சேர்ந்து செயல்பட வேண்டிய விசயங்களுக்காக, சேர்ந்தே சட்டங்களை இயற்றுகின்றன. இவைகள் பற்றிய முழு விபரங்கள் இந்திய சாசனத்தில் (அரசமைப்பில்) ஏழாவது அட்டவனையில் மத்தியப்பட்டியல், மாநிலப்பட்டியல் மற்றும் பொதுப்பட்டியல் என்கிற தனித்தனி தலைப்புகளில் கொடுக்கப்பட்டுள்ளது.
மத்திய சட்டத்தைப் பொருத்தவரை, குடியரசுத்தலைவரும், மாநில சட்டத்தைப் பொருத்தவரை ஆளுநரும் கையெப்பமிட்டதும் அமலுக்கு வருகிறது. இவ்விரு அரசுகளும் சேர்ந்து இயற்ற வேண்டிய சட்டத்திற்கு குடியரசுத் தலைவரே கையெப்பமிட வேண்டும்.
மத்திய சட்டத்தை பொருத்தவரை, இந்தியாவில் வசிக்கும் சாதாரண குடிமகன் முதல் குடியரசுத்தலைவர் வரை கட்டுப்படுத்தும். இதேபோல், மாநில சட்டங்களை பொருத்தவரை, அம்மாநிலத்தில் வசிக்கும் குடிமகன் முதல் ஆளுநர் வரை கட்டுப்படுத்தும்.
இப்படி குடியரசுத் தலைவரும், ஆளுநரும் கையொப்பமிட்டு அமல்படுத்தியுள்ள சட்டத்தை அவர்கள் முதல் அவர்களுக்கு கீழான அதிகாரம் கொண்ட எவரும் மீற முடியாது.
அப்படி மீற வேண்டுமானால், அவர் குடியரசுத் தலைவரை விட அல்லது ஆளுநரை விட, அதிக அதிகாரம் கொண்டவராக இருக்க வேண்டும் அல்லது மத்திய அரசின் சட்டத்தில் இருந்து ஒருசில குறிப்பிட்ட மாநிலங்களுக்கு குடியரசுத்தலைவர் மத்திய அரசின் இம்முழுச் சட்டமோ அல்லது ஒருசில குறிப்பிட்ட பகுதிகளோ பொருந்தாது என விதி விலக்கு அளித்திருக்க வேண்டும்.
குடும்பத்தின் பொறுப்புகள் அனைத்தும் எப்படி குடும்பத் தலைவரிடம் இருக்கிறதோ அதேபோல, இந்தியாவின் மற்றும் மாநிலத்தின் தலைமை நிர்வாக பொறுப்புகள் அனைத்தும், இந்திய சாசனக் கோட்பாடு 53(1) மற்றும் 154(1) இன்படி, முறையே குடியரசுத் தலைவரிடமும், ஆளுநரிடமும்தாம் இருக்கிறது என்பதால், இவர்களை விட அதிக அதிகாரம் உள்ளவர்கள் என நாட்டில் மற்றும் மாநிலத்தில் யாருமே கிடையாது.
இவர்களுக்கு உதவி செய்யத் தேவையான, அந்தந்த அமைச்சரவையை ஏற்படுத்தவே தேர்தல் மூலம் மக்கள் தங்களின் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கின்றனர். இப்பிரதிநிதிகளில் இருந்து அமைச்சர்கள் நியமிக்கப் படுகின்றனர். இதனாலேயே, குடியரசுத் தலைவரும், ஆளுநருமே, அளவலாவிய ஏகாதிபத்திய அதிகாரத்தைக் கொண்டவர்கள் என்றும், நமக்கெல்லாம் ஒன்றுமே இல்லை என்றும் ஒருபோதும் தவறாக கருதி விட வேண்டாம். இது குறித்து (பரவலாக்கப்பட்ட அதிகாரம்)  என்கிற கட்டுரையின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.
மாநிலங்களுக்கு குடியரசுத் தலைவர் தரும் விதிவிலக்குகளின் கீழ்தாம்,  மும்பை மற்றும் கொல்கத்தாவில் மாநில அரசின் அங்கீகாரத்துடன் விபச்சார விடுதிகள் இன்றும் நடத்தப்படுகின்றன. இதேபோல், இந்தியாவில் வேறு எங்குமே இல்லாத வகையில் தமிழ்நாட்டில், தந்தைப் பெரியாரின் பகுத்தறிவுப் பாதையில், சமயச் சடங்குகள் இல்லாத சீர்த்திருத்த திருமணங்களை நடத்தவும் அனுமதி சிறப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதுவே சட்டம் அமல்படுத்தபடும் முறையும், கடைப்பிடிக்க வேண்டிய முறையும் ஆகும் என்பதால், எந்த அரசின் ஊழியர்கள் சட்டத்தை மீறினாலும், அவர்களுக்கான மேல்நிலை ஊழியரிடம் புகார் செய்யும் மூடத்தனமான நடைமுறையை விட்டொழித்து, சட்ட மீறலுக்கு ஏற்ப, நேரடியாக குடியரசுத் தலைவரிடமோ அல்லது ஆளுநரிடமோ அது குறித்து (சம்பந்தப்பட்ட ஊழியருக்கு சட்டத்தை மீற விதிவிலக்கு தரப்பட்டுள்ளதா?) விளக்கம் கேட்டு, அறிவிப்பு அனுப்புவதுதாம் சட்டப்படி சரியானது; ஊழியர்களை சரியானபடி வேலை வாங்கவும் ஏதுவானதாகும்.
இந்திய சாசனக் கோட்பாடு 361(4) இன்கீழ், ஆளுநர் அல்லது குடியரசுத் தலைவருக்குத்தாம் சட்டப்படியான அறிவிப்பை விடுக்க முடியும். இதுபோன்றதொரு அறிவிப்பை சட்ட ஆராய்ச்சியை தொடங்கிய நான்காம் ஆண்டான 12-07-2004 அன்றே குடியரசுத் தலைவருக்கு அனுப்பியுள்ளேன். இதற்கு முன்பாக வேறு யாரும் குடியரசுத் தலைவருக்கு, இக்கோட்பாட்டின் கீழ் அறிவிப்பு அனுப்பி உள்ளார்களா என்பதும் எனக்கு தெரியாது.
ஆனால், கடந்த காலங்களில் அறிவு வறுமை வக்கீல்கள், பரபரப்புக்காகவும், தங்களின் பகட்டுக்காகவும் பல்வேறு விடயங்களில் பிரதமருக்கு அறிவிப்பை அனுப்பினார்கள். அத்தோடு, அவர்கள் அதை மறந்தும் விட்டார்கள் என்பதை நீங்கள் நினைவில் கொள்ளுங்கள்.
இப்படி இந்திய நாட்டில் உள்ள அல்லது ஒரு மாநிலத்தில் உள்ள அனைத்து குடிமக்களும் கடைப்பிடிக்க வேண்டும் என்கிற உன்னத நோக்கத்தோடு, அமல்படுத்தப்பட்ட சட்டத்தை, நம்மைப் போல் அலசி ஆராய்ந்து விளக்கமாக சொல்லாமல், அப்படியே ஈயடிச்சான் காபி போல், நூலாக எழுதி வெளியிடும் வக்கீல்களும், நீதிபதிகளும், சட்ட நூல்களை வெளியிடும் பதிப்பகங்களும், அச்சட்டங்களை தங்களது பாட்டன், முப்பாட்டன் சொத்துக்களைப் போல், எங்களுக்கே உரிமை என்று போட்டுக் கொள்வது அடிப்படை அறிவற்ற செயலே!
ஆதலால்தாம், நீதியைத்தேடி… நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம் என்கிற பொதுத்தலைப்பின் கீழ், நான் எழுதியுள்ள ஐந்து சட்ட விழிப்பறிவுணர்வு நூல்களின், வெளியீட்டு உரிமையையும் பொதுவுடைமை என அறிவித்து உள்ளேன்.
இதனை முதன் முதலாக கேர் சொசைட்டி மத்திய சட்ட அமைச்சகம், தனக்குத்தானே வாதாடி, தனது நியாயத்தை தக்க வைத்துக் கொண்வர்கள் மற்றும் உங்களைப் போன்ற சட்ட விழிப்பறிவுணர்வு தன்னார்வலர்களின் நிதியுதவியோடு வெளியிட்டு உள்ளது. இதுபோல், நீங்களும் விரும்பும் பெயர்களில், மொழிகளில் வெளியிட்டு விற்பனை செய்து கொள்ளலாம்.

பொதுவுடைமை நூல்களைப் பற்றிய சுருக்க விபர விளக்கங்கள்.

1. நீதியைத்தேடி… நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம்! குற்ற விசாரணைகள்.

நீதியைத்தேடி… நூல்களின் வரிசையில் சட்ட விழிப்பறிவுணர்வுக்காக நீங்கள் படிக்க வேண்டிய முதல் நூல் இதுவேயாகும். 2006 ஆண்டு எழுதப்பட்ட இந்நூலில் சட்டத்தை எளிதாக படிப்பதும், புரிந்து கொள்வது குறித்தும்…
அடிப்படையான ஐந்து சட்டங்களை என்னனென்ன…
காவல் நிலையத்தில் புகார் கொடுப்பது…
நீதிமன்றத்தில் முறையீடு தாக்கல் செய்வது…
சாட்சி சொல்ல செலவு தொகை கேட்பது…
வாய்தா கேட்டால், அதற்காக பணம் கேட்பது…
மனு எழுதும் முறைகள் மற்றும் மனு மாதிரிகள்…
என பல்வேறு விடயங்கள் அடங்கியுள்ளன. மிக முக்கியமாக நீங்கள் இந்நூலை வாசிக்கும் போது, படிப்பது போன்று தெரியாது. மாறாக, நான் உங்களுடன் இப்படி நேரடியாக பேசிக் கொண்டிருப்பதைப் போலவும், நீங்கள் கேட்டுக் கொண்டிருப்பது போன்ற உணர்வு ஏற்படும் என்பதால், சட்டம் குறித்த அடிப்படையான விபரங்கள் எளிதாக புரிந்து விடும். புது நம்பிக்கையும் பிறக்கும்.
இந்நூல் முழுக்க முழுக்க குற்றம் சார்ந்த விசாரணைகளுக்கு மட்டுமே பொருந்தக் கூடியது. இந்நூலுக்கு பல்வேறு இதழ்கள் எழுதிய மதிப்புரைகள், அதிலேயே தொகுக்கப்பட்டுள்ளன.
இந்நூலின் நன்கொடை ரூ 50.

2. நீதியைத்தேடி… நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம்! பிணை (ஜாமீன்) எடுப்பது எப்படி?

முதன் முதலாக 2003 ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு, உடனே பிணையில் வந்து, பின் என் மீது வாரண்ட் பிறப்பித்து ஒரு வருடம் கைது செய்யாமல் இருந்ததன் நினைவு நூலாக 2004 ஆம் ஆண்டு எழுதப்பட்டது. ஆனால், 2005 ஆண்டில், வாரண்ட்டின்படி கைது செய்ய வைத்து, சிறைக்கு சென்று சுமார் 87 நாட்கள் தங்கியிருந்த அனுபவங்களை எல்லாம் மையப்படுத்தி 2007 ஆம் ஆண்டு, நீதியைத்தேடி… நூல்களின் வரிசையில் நீங்கள் படிக்க வேண்டிய இரண்டாவது நூலாக புதுப்பிக்கப்பட்டுள்ளது.
பிணையில் வருவதற்கு மொத்தம் எத்தனைப் பிரிவுகள் என உங்களுக்கு தெரிந்த வக்கீலிடம் கேட்டால் குற்ற விசாரணை முறை விதிகள் 436 முதல் 439 வரை என நான்கு விதிகளைச் சொல்லுவார்கள். ஆனால் நான் இந்நூலில், ஒட்டு மொத்தமாக ஐம்பது விதிகளை சொல்லியுள்ளேன்.
2003 ஆம் ஆண்டில், தண்டவாளத்தை தாண்டிச் சென்றது குற்றம் என்று, சென்னை பெரம்பூர் இரயில்வே காவல்துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது, மக்கு மங்களம் என்கிற பெண் நடுவரிடம் வாதாடிய காட்சியை அப்படியே படம் பிடித்து காட்டியுள்ளேன்.
கைது செய்யப்பட்டதும் நமக்குள்ள உரிமைகள் குறித்தும்…
சிறைச்சாலை சட்டங்கள் குறித்தும்…
சிறைக்கு சென்று வருவதில் உள்ள சிறப்பு குறித்தும்…
சிறையில் நடத்திய சட்ட விழிப்பறிவுணர்வு குறித்தும்…
இவ்விழிப்பறிவுணர்வால், தனக்குதானே சிறையில் இருந்து வாதாடிய கைதிகள் குறித்தும்…
விசாரணை மற்றும் தண்டனை கைதிகளின் உண்மையான மன நிலைகள் குறித்தும்…
பல்வேறு விடயங்களை எழுதியுள்ளேன். இந்த நூலை படித்து முடித்ததும் நாமும் ஒருமுறை சிறைக்கு போய் வரலாமே என்கிற எண்ணம் ஏற்படும்.
இந்நூலின் நன்கொடை ரூ 60.

3. நீதியைத்தேடி… நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம்! சட்ட அறிவுக் களஞ்சியம்.

இந்நூல்,2008 ஆம் ஆண்டில் எழுதப்பட்டது. நீதியைத்தேடி… நூல்களின் வரிசையில் படிக்க வேண்டிய வரிசையில் மூன்றாவது நூலாகும். முதல் இரண்டு நூல்களை படித்தப்பின் இந்நூலை படித்தால் ஏற்படும் புரிதலை விட, இந்நூலை நேரடியாக படிக்கும் போது கிடைக்கும் புரிதல் மிகவும் குறைவாகவே இருக்கும். உங்களின் திறனைப் பொருத்து புரிதல் மாறுபடலாம்.
இதில், இந்திய அரசமைப்பு தோண்றிய வரலாறு…
இந்திய அரசமைப்பின் சாதக பாதகங்கள்…
புதிய அரசமைப்பு தேவையா… என்பவைகளில் ஆரம்பித்து சமுதாயத்தில் இன்று நிலவும் லஞ்சம், மணக்கொடை, சொத்து பிரச்சினைகள், பாகப் பிரிவினை, அனைத்து மத திருமணம் தொடர்பான விபரங்கள் என பல்வேறு விடயங்கள் உள்ளன. ஐந்து நூல்களில் இதுவே அதிக பக்கங்களை கொண்ட நூல்.
இந்நூலின் நன்கொடை ரூ 100.

4. நீதியைத்தேடி… நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம்! சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில்.

மிகமிக முக்கியமான இந்நூல் 2009 ஆம் ஆண்டில், எழுதப்பட்டது. நீதியைத்தேடி… நூல்களின் வரிசையில் முதல் மூன்று நூல்களை படித்து புரிந்திருந்தால் மட்டுமே, இந்நூலைப் படித்து புரிந்து கொள்ள முடியும்.
கிரிமினல், சிவில், லேபர், விவாகரத்து, நுகர்வோர் என வக்கீல்களில் தனித்தனியாக உள்ளனர். கிரிமினல் வக்கீல் மீது ஒரு சிவில் வழக்கு என்றால், அதனை அவருக்கு நடத்த தெரியாது. இதுபோல்தான், மற்ற வழக்குகளுக்கும். ஒருசில குற்றம் தொடர்பான வழக்குகளைத் தவிர, பல உரிமையியல் சார்ந்த வழக்குகள் குற்ற வழக்குகளாக வேண்டுமென்றே திட்டமிட்டு மாற்றப்படுகின்றன.
உண்மையாக, தொழிலாளி போராடினால், முதலாளியே கம்பெனி பொருளை உடைத்து விட்டு, தொழிலாளி மீது காவல் நிலையத்தில் புகார் கொடுப்பது… நிலத்தகராறை அடிதடியாக்கி அல்லது வெட்டுகுத்தாக்கி குற்றவியலாக மாற்றுவது… எதற்கெடுத்தாலும் மனைவிகள், கணவன் வீட்டார் மீது வரதட்சினை வழக்கு கொடுப்பது… எதற்கெடுத்தாலும், சாதியைச் சொல்லி திட்டினார் என வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் புகார் கொடுப்பது… என பல விடயங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.
உங்களுக்காக, நீங்களே வாதாட முனைந்துள்ள உங்களுக்கு இதுபோன்ற வழக்குகள் எது வந்தாலும், அதை எளிதாக எதிர் கொள்ளும் விதத்தில் சாசனம், சட்டம், விதிகள் என 14 வகையான சட்டம் மற்றும் விதிகளை ஒருங்கிணைத்து பட்டியல் இட்டுள்ளேன்.
நீங்களே வாதாட இந்திய அரசமைப்பில் கோட்பாடு 19 இல் ஆரம்பித்து, மற்ற 13 சட்ட விதிகளுக்கான பிரிவுகள் ஒரே நேர்க்கோட்டில் பட்டியல் இடப்பட்டிருக்கும்.
இந்த 14 சட்ட விதிகளும் ஒன்றுக்கொன்று அதிகபட்சம் தொடர்பில்லாததாகவும், நேரெதிர் திசையின் தன்மையைக் கொண்டது. இன்னும் புரியும்படி சொல்லப்போனால், இந்தியாவில் உள்ள மதங்கள், சாதிகளை எல்லாம் ஒருங்கிணைத்து, ஒரே நேர்க்கோட்டில் நிலை நிறுத்துவது போன்றது.  இவைகளை ஒருங்கிணைத்திருப்பது இதுவரை யாரும் செய்யாதது.
பொதுமக்களான உங்களுக்கு பயன்பட வேண்டும் என்கிற நோக்கில் எழுதப்பட்ட இவ்வைந்து நூல்களையும், வக்கீல்களும், நீதிபதிகளுமே வரப்பிரசாதமாக படிக்கின்றனர்.
நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதற்கு முன்பாக கொடுக்கப்படும் அறிவிப்பில் ஆரம்பித்து, சொல்லப்பட்ட தீர்ப்பை நிறைவேற்றுவது வரை, ஒவ்வொரு நிலையிலும் செய்ய வேண்டிய செயல்களை விளக்கியுள்ளேன்.
இந்நூலின் நன்கொடை ரூ 100.

5. நீதியைத்தேடி… நீங்களும் நீதிமன்றத்தில் வாதாடலாம்! சாட்சியங்களை சேகரிப்பது எப்படி?

நீதியைத்தேடி… நூல்களின் வரிசையில் 2010 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட இந்நூலே, பத்து வருட சட்ட ஆராய்ச்சியின் கடைசி நூலாகும். 
கண்ணால் காண்பதும் பொய்; காதால் கேட்பதும் பொய்; தீர விசாரிப்பதே மெய் என்பது நீதி விசாரணைக்கான அடிப்படை இலக்கணம்.
நாம் எதை சொன்னாலும், அதற்கு என்ன ஆதாரம் இருக்கிறது என்பதுதான், சாதாரணமாக கேட்கும் கேள்வியாக இருக்கிறது. நீதிமன்றத்தைப் பொருத்தவரை சொல்லவே வேண்டாம். சரியான ஆதாரங்களை தந்தாலும் கூட, ஏற்க மறுப்பார்கள். நம்பிக்கையோடு நண்பனுக்கு தந்த பணத்தை திருப்பி தர மறுக்கிறான்…
நீதிபதிகள் உட்பட உங்களின் ஊழியர்கள் சட்டத்துக்கு புறம்பான செயல்களில் ஈடுபடுகிறார்கள்… இப்படி எத்தனையோ சம்பவங்கள் ஆதாரத்தோடும், ஆதாரமில்லாமலும் அனுதினமும் நடக்கின்றன.
இதற்காக வக்கீல்கள் சாட்சிகளை உருவாக்குவார்கள். திட்டமிட்டு உருவாக்கும் ஆதாரங்கள் உருகுலைந்து போகும். ஆதலால், தடயம் இல்லாமல் எதுவுமே நடக்காது என்கிற அடிப்படையில் அத்தடயத்தை சேகரிப்பது எப்படி என்பதை விளக்குகிறது.
இவைகளை எல்லாம் எப்படி சட்டரீதியான ஆதாரங்களாக, நவீன தொழில் நுட்பங்களின் உதவியோடு சேகரிப்பது, பாதுகாப்பது ஆகியவற்றை, நடந்த உண்மைச் சம்பவங்களை மையப்படுத்தி தக்க கதையாகச் சொல்லி உணர்த்தும் வகையில் எழுதப்பட்டுள்ளது.
இந்நூலின் நன்கொடை ரூ 120.
முக்கிய பின் குறிப்புகள்:
இவ்வைந்து நூல்கள் குறித்து பல்வேறு இதழ்களும் எழுதியுள்ள மதிப்புரைகளைப் படிக்க இங்கே சொடுக்கவும்.
நூல்களின்  கருத்துக்கள் அனைத்தும், நியாயம்தான் சட்டம் என்கிற அடிப்படை தத்துவத்தின் கீழ் சட்டத்துக்கு உட்பட்ட கருத்துக்களையே, வக்கீல்கள், நீதிபதிகள் மட்டுமல்லாது யாருமே சிந்தித்து பார்க்காத புதுப்புது கோணங்களில், சட்ட விளக்கங்களை சொல்லியுள்ளேன்.
இவ்வைந்து நூல்களையும் பத்து வருட மற்றும் பலதரப்பட்ட அனுபவங்களின் வாயிலாக அனுபவத்தின் அடிப்படையில் எழுதியுள்ளேன். இவை இரண்டும் ஒரு சேர நூலாக வருவது அரிதே! ஆதலால், நூல்களை வரிசைக் கிரகமாக, ஒன்றன்பின் ஒன்றாக, புரிந்து கொண்டு படிக்க முற்பட்டால், எல்லாமே எளிதாக விளங்கும்.
சரி, உங்களுக்கு விளங்கி விட்டது. ஆனால், விளங்க வேண்டியவர்களுக்கு, விளங்க வேண்டுமே! என்று யோசித்துதாம், காவல் நிலையங்களுக்கும், நீதிமன்றங்களுக்கும் கூட, நூல்கள் வழங்கப்பட்டுள்ளது. ஒருவேளை, உங்களது வழக்கை நடத்தும் “மக்கு மங்களம்”போன்ற நீதிபதிகளுக்கு புரியவில்லை. உங்களின் புரிய வைக்கும் முயற்சியும் எடுபடவில்லை. என்ன செய்வது என்கிற கவலையை விடுங்கள்.
இந்த புத்தகத்தைப் படித்தும், சட்டத்தை சரி பார்த்தும்தான் இதைச் சொல்கிறேன். இதனை ஏற்க இயலாது என்றால், இச்சட்டக் கருத்தை எழுதிய என்னை முக்கிய சாட்சியாக அழைத்து விசாரணை செய்ய வேண்டும் என்கிற மனுவை மட்டும் கொடுங்கள். நீதிபதிகளுக்கு புரியாததும் புரிந்து விடும்.
அப்படியும் புரியவில்லையா, அது தொடர்பான அந்நீதிமன்ற அழைப்பானையை எனக்கு அனுப்புங்கள். நான் வந்து புரிய வைக்கிறேன் என்கிற உத்திரவாதத்தை ஒவ்வொரு நூலிலும் சொல்லியுள்ளேன். ஆனால், யாருமே இதுவரை அழைக்கவில்லை. அழைக்கவில்லை என்றால், என்ன அர்த்தம்? அழைக்க வேண்டிய அவசியமே இல்லை என்கிற அளவிற்கு எளிமையாக புரிகிறது. ஆதலால் காரியத்தை சாதித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதே பொருள். (நெமிலியப்பன்)
அப்பாடா, இப்பத்தான் நிம்மதியா இருக்கு என்று பெருமூச்சு விடுகிறீர்கள் போலிருக்கிறதே! சற்று பொறுங்கள். இதில், உங்களுக்கு ஒரு சில நிபந்தனைகளும், சிக்கல்களும் இருக்கின்றன.
நான் சொல்லும், இச்சட்ட சங்கதிகள் ஐம்புலண்களால் உணர முடியாதது அல்ல. மாறாக, யார் படித்தாலும் புரிந்து கொள்ளும் வகையில், எழுத்து மூலமாக, இந்திய அரசால் அல்லது மாநில அரசால் எழுத்தால் எழுதப்பட்டுள்ள சங்கதியே ஆகும்.
ஆனாலும், நான் சொல்வது சட்டத்திற்கான விளக்க உரையே! இதைப் படித்ததும், நான் சொல்லியுள்ள கருத்துக்கள் எந்த அளவிற்கு சரியானது என்பதை அறிவதற்காக, அதற்குறிய மூல சட்ட விதிகளை படித்து, சரி பார்த்துக் கொள்ள வேண்டும். மூல நூல்கள் பற்றிய விபரங்கள், கிடைக்கும் இடங்கள் எல்லாம், முதல் நூலிலேயே சொல்லப்பட்டுள்ளது.
நான் சொன்ன சட்ட விளக்க கருத்துக்கள் சரியாக இருக்கிறது என்ற முடிவுக்கு, நீங்கள் வந்து விட்டால், நீங்களே நீதிபதிக்கு புரிய வைத்து விட முடியும். எனது கருத்துக்களையோ அல்லது நூல்களையோ மேற்கோள் காட்ட வேண்டியதில்லை.
அப்போதுதான் உங்களது திறமை வளரும். அதன் மூலம் நீங்களும் இதுபோன்ற சட்ட விழிப்பறிவுணர்வு கடமைகளை ஆற்ற முடியும்.
இதில், இன்னொரு நன்மையும் உங்களுக்கு உண்டு. அதாவது, அறிவுக்கும், படிப்புக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை உணர திறனில்லாத நீதிபதிகளின் சினத்திற்கு ஆளாகாமல் தப்பிக்கலாம்.
ஒருவேளை, புரியாத விடயங்கள் ஏதும் இருப்பின், எந்த நூலில், என்ன தலைப்பில் என தெரிவித்து விளக்க கோரினால் மட்டும், எழுதியவன் என்கிற முறையில், முடிந்த வரை விளக்க கடமைப்பட்டுள்ளேன்.
எனவே, நூலில் உள்ள சட்ட சங்கதிகளை எப்படி பயன்படுத்தி பலன் அடைவது; நியாயத்தை தக்க வைத்துக் கொள்வது என நீங்களேதான், உங்கள் பிரச்சினைக்காக யோசிக்க வேண்டும். மனு எழுத வேண்டும்.
இதைச் செய்யாமல், உங்களின் பிரச்சினைகள் / வழக்குகள் குறித்து ஆலோசனை கேட்க நினைத்தால், ஒருபோதும் கிடைக்காது.
இதுபோலவே, நியாயம்தான் சட்டம் என்பதற்கு மாறாக, நீங்கள் எதையாவது ஏடாகூடமாக செய்து விட்டு, என்னை நீதிமன்றத்துக்கு சட்டம் குறித்து விளக்கமளிக்க, முக்கிய சாட்சியாக அழைக்க நேர்ந்தால், உங்களது சட்டத்துக்கு புறம்பான செயல்களுக்கு, நானே தண்டனை கொடுக்க வலியுறுத்த வேண்டியிருக்கும். இதுவும் எனது கடமைதாம் என்பதையும் மறந்து விடாதீர்கள்.
நூல்களின் நன்கொடை விபரங்கள் மற்றும் கொரியர் செலவுகள் எல்லாம் மாற்றத்துக்கு உரியவைகளாகவே இருப்பதால், இது குறித்து எங்களின் உலாப்பேசிகளில் தொடர்பு கொண்டு, நன்றாக அறிந்து கொண்டு வாங்க முயற்சியுங்கள்.

0 Add your Comments/Feedback:

Popular Posts

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியம் உணர்ந்து இந்த வலைப்பூவிற்கு வருகை தந்துள்ள உங்களை வருக! வருக!! என அன்புடன் வரவேற்று பயன் பெறுக! பெறுக!! என வாழ்த்துகிறேன்.
 photo Indian_Flag_Pole.gif

Social Media's

Total Pageviews

Labels

Flash Labels by Blogger Widgets

Unordered List

Blog Archive

Followers

 photo Animation4.gif
Related Posts Plugin for WordPress, Blogger...