Warrant Balaw Blog - वारंट बाला चिट्ठा

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியம் உணர்ந்து இந்த வலைப்பூவிற்கு வருகை தந்துள்ள உங்களை வருக! வருக!! என அன்புடன் வரவேற்று பயன் பெறுக! பெறுக!! என வாழ்த்துகிறேன்.

Neethiyaithedy

,

,

..

..

Apr 18, 2015

தகவல் பெறும் உரிமைச் சட்டம்; தறுதலை சட்டமே!

ர்ப் புறங்களில் ஒன்றுக்கும் உதவாத நபர்களைத் தறுதலை என்பார்கள். அதுபோன்றே அரசால் கொண்டு வரப்பட்டு, பலராலும் பயன்படுத்தப்படும் சட்டமான தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 ஆனது, எனது சட்ட ஆராய்ச்சியின் அடிப்படையில், ஒன்றுக்கும் உதவாத தறுதலைச் சட்டமாகும்.
பொதுமக்களாகிய நம் வசம் உள்ள ஆவணங்களைத் தவிர, மற்ற அனைத்து வகையான ஆவணங்களும் பொது ஆவணங்களே என இந்திய சாட்சிய சட்டம் 1872- இன் உறுபு 74 மற்றும் 75 அறிவுறுத்துகிறது.
இதனைத் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை விட, இந்திய சாட்சிய சட்டம் 1872- இன் உறுபு 76-இன் கீழ் தேவையான தகவல்களை, சான்று நகலாகவே பெறலாம் என்பது அரசுக்குத் தெரியாமலா தகவல் பெறும் உரிமைச் சட்டத்தையே இயற்றியிருக்கிறது என்ற கேள்வி எழுந்தால், தெரிந்தோ தெரியாமலோ தான் இயற்றியிருக்கிறது என்று இரண்டாங்கெட்டான் தனமாகத்தான் பதில் சொல்ல முடியும்!
சரி, அப்படியானால் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை இயற்ற வேண்டியதன் அடிப்படை நோக்கம்தான் என்ன?
தன்னையும் தன்னைச் சார்ந்த ஊழியர்களையும் காப்பாற்றிக் கொள்வதற்காகத்தானே தவிர, நிச்சயமாக நீங்கள் நினைப்பது போல் உங்களுக்குத் தகவலைத் தந்து பல விதங்களில் உதவுவவோ அல்லது தங்களைச் சீர்த்திருத்திக் கொள்ளவோ அல்லது பருவகால நிலை அறிந்து நிதி திரட்டி, திருடும் தன்னார்வலர்கள் கூறுவது போல, நமக்கு கிடைத்த இரண்டாவது சுதந்திரமோ அல்லவே அல்ல..!
மாறாக, அரசு தான் தெரிந்தே செய்யும் தவறுகளில் இருந்து தப்பிப்பதற்கான தந்தரமாகவே இந்தத் தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 ஐ இயற்றியிருக்கிறது என்பது ஒருபுறம் என்றால், திருட்டுத் தன்னார்வலர்களுக்கு(!)ப் பொருளீட்டுவதற்கான தாரக மந்திரமே இதன் மறுபுறம் என்று நான் சொல்வது, உங்களுக்குச் சற்று அதிர்ச்சியாகவும், சந்தேகமாகவும்தான் இருக்கும். ஆனால், இதுதான் யதார்த்தமான உண்மை.
ஆம்! சட்டத்தைக் குறையரையாக (அரைகுறையல்ல; குறையில் அரை) தெரிந்து கொண்டு, கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களும் இடைத்தரகர்களும் ஆன வக்கீலே, சமுதாய சீர்கேடுகள் அனைத்திற்கும் காரணம் என்றால், சட்ட அறிவு அறவே இல்லாத பல தன்னார்வ தொண்டர்கள், தொண்டு நிறுவனம் என்ற பெயரில் ஃபண்டு நிறுவனமாக செயல்படுகின்றனர். இவர்களின் ஃபண்டுக்கு முக்கியமாக கை கொடுப்பது, தகவல் பெறும் உரிமைச் சட்டம் போன்று வரும் ஒருசில பருவகால நிலைமாறும் சட்டங்கள்தான்.
இந்த ஒரு சில பருவகால நிலைமாறும் சட்டங்களில் முதன்மையானது, 1986ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம். அடுத்ததாக, 1993ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம். தற்போது, தகவல் பெறும் உரிமைச் சட்டம். அடுத்தது என்னவோ..?
இது போன்ற பருவ நிலைச் சட்டங்கள் அனைத்தும் அமலுக்கு வந்த கொஞ்ச காலத்திற்குப் பரபரப்பாகத்தான் இருக்கும். ஏனெனில், இவைகளைப் பரப்புவதற்காக, அரசும், வெளிநாட்டு நிறுவனங்களும் ஒதுக்கீடு செய்யும் நிதியைப் பெற்று, ஒரு பக்கம் உயர் வகுப்பு கும்பல் கும்மாளமிடுகின்றனர் என்றால், நடுத்தர கும்பலோ, நம்மைப் போன்றோரைக் கொள்ளையடித்துக் கொண்டு இருக்கின்றனர்.
இந்திய அரசமைப்பு, இந்திய சாட்சியச் சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், குற்ற விசாரணை முறை விதிகள் மற்றும் உரிமையியல் விசாரணை முறை விதிகள் போன்ற மிகவும் அவசியமான, அத்தியாவசியமான அடிப்படைச் சட்டங்களைப்பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தாமல், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை மட்டும், அரசே ஆங்காங்கே தண்டோரா போட்டு பிரபலப்படுத்த என்ன காரணம் என்பதை நீங்கள் யோசிக்க வேண்டும், இல்லையோ?
நம்மை அடக்கியாளத் தேவையான ஒழுங்குபடுத்தும் சட்டங்களை இயற்றுவதையே கொள்கையாக கொண்டு வதை செய்யும் அரசு, அதற்கு முற்றிலும் மாறாக, அவ்வளவு எளிதாக அரசை ஒழுங்குபடுத்தும் அளவிற்கு அவ்வளவு எளிதாக, நமக்கு வழிவகையை ஏற்படுத்தித் தருவதற்கு இன்றைய ஆட்சியாளர்கள் அப்பழுக்கற்ற துறவிகளா அல்லது துறவறம் பூண்டவர்களா? இல்லையே!
மாறாக, மனைவி மட்டும் போதாதென்று, துணைவிகளையும் துதிபாடுபவர்களையும் தூக்கி வைத்துக்கொண்டு மற்ற மக்களை மாற்றாந்தாய் மனப்பான்மையோடு, கொல்லாமல் கொல்கிறவர்கள் ஆயிற்றே.
சுருக்குன்னு ஏறுகிற மாதிரி சுருக்கமாகச் சொல்ல வேண்டும் எனில், தகவல் பெறும் உரிமைச் சட்டம் நம்மிடம் வளர்ந்தால்தான் அவர்கள், அனைத்து வகையிலும் நம்மால் வளர முடியும். மாறாக, நான் குறிப்பிடும் ஐந்து அடிப்படை சட்டங்களைக் குறித்த விழிப்பறிவுணர்வு  வளர்ந்தால், அவர்கள் அறவே வளர முடியாது என்பதோடு, அறத்தோடுதான் ஆட்சி செய்ய வேண்டியிருக்கும்.
இதுவே உண்மை என்பதை,
கற்க கசடற கற்பவை கற்றப்பின்
நிற்க அதற்குத் தக!
என்கிற வள்ளுவத் தாத்தாவின் தத்துவ வாக்கிற்கு இணங்க, மேற்குறிப்பிட்ட அவ்வைந்து அடிப்படை சட்டங்களையும் நீங்களே,
படித்து பரிசீலித்து பரிசீலித்ததைப் பயன்படுத்திப்
பலனடைந்து பண்பட்டாலே உண்டு!
இந்திய சாட்சியச் சட்டத்தின்படி, சான்று நகலைக் கோரும் விண்ணப்பத்திற்குக் கட்டணம் எதுவும் கிடையாது. அதேபோல வழங்கப்படும் சான்று நகல்களையும் மேற்சொன்ன “தாய்ப்பால் தத்துவத்திற்கு” இணங்க தருமமாகவே தருகிறார்கள்.
ஒருவேளை கட்டணம் கேட்டாலும் அதனை அஞ்சல் வழியே செலுத்தலாம் என்பதால், நவீன தொழில் நுட்பத்திற்கு ஏற்ப மின்னஞ்சல் மூலம் விண்ணப்பம் அனுப்பவும் பெறவும் தடையேதும் இல்லை. ஆனாலும் நானும் இதுவரை மின்னஞ்சலில் விண்ணப்பித்ததில்லை. தற்போது பெற முயற்சி செய்யும் விதமாக விண்ணப்பம் ஒன்றைத் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ளேன்.
ஆனால், 2005ஆம் ஆண்டில் அனைத்து மாவட்ட மக்கள் தொடர்பு ஊழியர்கள், மற்றும் காவல் கண்காணிப்பு ஊழியர்களுக்கு, உலாப்பேசி மூலம், சான்று நகல் கோரி குறுஞ்செய்தி அனுப்பியதில், சுமார் பத்து பேருக்கும் மேல், குறுந்தகவல் மூலமே பதிலும் தந்தார்கள்.
ஒரு மாவட்ட காவல் கண்காணிப்பு ஊழியர் மட்டும் உலாப்பேசியிலேயே அழைத்து, முற்றிலும் வித்தியாசமான குறுஞ்செய்தி முயற்சியை ஊக்குவித்தார். அவர் பேச்சின் சாராம்சம், “நாம் அனுப்பும் கடிதங்கள் அவர்களின் கவனத்திற்குச் செல்லாமல், கீழேயே தப்பும் தவறுமாக, பொறுப்பில்லாதனமாக முடிவெடுத்து விடுகிறார்கள்” என்று பொறுப்போடு சொன்னார்.
“இது போன்ற குறுந்தகவல் எங்களுக்கு நேரடியாக கிடைப்பதால், உடனே பதில் அளித்து விட முடிகிறது” என்றும், “தன்னை ஒரு வாரத்திற்கு முன்பே வேறு பொறுப்புக்கு மாற்றி விட்டதாகவும் ஆனாலும், நவீன தொலைத்தொடர்பு தொழில் நுட்பத்தில், சட்ட நுட்பத்தை நுழைத்ததில் ஈர்ப்பு கொண்டே அழைத்ததாக”வும் கூறினார். இப்போதுள்ள உயர்ரக உலாப்பேசி அப்போது இல்லாததால், குறுஞ்செய்தி மற்றும் உரையாடலைச் சேமித்து வைக்க முடியவில்லை.
அந்தக் குறுந்தகவல்களைப் பார்த்து, வாசகர்கள் பலரும் கூட ஆச்சரியப்பட்டார்கள். ஆனால், இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமே இல்லை. ஏனெனில், அரசு ஊழியர்கள் நமக்கான ஊழியர்கள் என்ற அடிப்படையில், அவர்களை எப்படி பணிய(ாற்ற) வைப்பது என்பதை நாம்தானே முடிவெடுக்க வேண்டும். நீங்கள் முடிவெடுக்க முயலாததால், அவர்கள் அப்படியே மூடி வைத்து விட முடிவெடுத்து விடுகிறார்கள். அவ்வளவே!
நான் கேட்டிருந்த கேள்வி என்ன தெரியுமா? “தாங்கள் பணியாற்றும் மாவட்டத்தில் எத்தனை நீதிமன்றங்கள், காவல் நிலையங்கள் உள்ளன?” என்ற சாதாரண கேள்விதான்.
சாதாரண முறையில் பல்வேறு துறைகளிலிருந்து சான்று நகல்களைப் பெற்றுள்ளேன். இதில் தங்களின் பார்வைக்காக தமிழ்நாடு சட்டத்துறையில் இருந்து பெற்ற கடிதத்தை இங்கு உள்ளீடு செய்கிறேன்.
மீண்டும் ஒரு முறை இதனை நன்றாகப் படியுங்கள். ஏனெனில், இதிலுள்ள பல விடயங்களைப் பற்றி, அதீத பற்றுதலோடு பற்றவைக்க (தேவையற்றதை கொளுத்தவும், ஓட்டையுள்ளதை அடைக்கவும்) வேண்டியுள்ளது.
இக்கடிதத்தின் பொருள் பகுதியில், மேற்படி நான் சொன்ன இந்திய சாட்சிய சட்டத்தைக் குறிப்பிட்டு, சட்டத்துறையே சான்று நகல் தந்திருப்பதன் மூலம், தகவல் பெறும் உரிமை சட்டத்திற்கு முன்பாக, சுமார் 130 ஆண்டுகளுக்கு முன்னரே, நமக்குத் தேவையான விடயங்களைச் சான்று நகலாக பெறவே உரிமை இருக்கிறது எனும் போது, ஒன்றுக்குமே உதவாத இத்தறுதலை தகவல் சட்டம் எதற்கு?
சரி, ஒரு சங்கதியைத் தகவலாக பெறுவதற்கும், சான்று நகலாக பெறுவதற்கும் என்ன வித்தியாசம்? தகவல் என்றால், அது உண்மையாகவும் இருக்கலாம் அல்லது பொய்யாகவும் இருக்கலாம் என்பதால் அதனைத் தக்க ஆதாரமாக நீதிப்பூர்வமான விசாரணையில் எடுத்துக் கொள்ள இயலாது. இதில் பல தகவல்கள் பொய்யாகத்தான் இருக்கும் என்பது, அப்படி தகவலைப் போராடிப் பெற்றவர்களுக்கு மட்டுமே தெரியும்.
ஆனால், சான்று நகல் என்பது இந்திய சாட்சியச் சட்டம் 1872இன் உறுபு 76இன் கீழ், இதில் உள்ள விடயங்கள் எல்லாம் உண்மையே என அதைக் கொடுக்கும் அரசு அல்லது பொது ஊழியர் சான்றொப்பம் (attested) செய்து வழங்குவதாகும் என்பதால், அச்சட்டத்தின் உறுபு 77இன் கீழ், எந்த ஒரு நீதிப்பூர்வமான விசாரணையிலும் தாக்கல் செய்து, அதிலுள்ள விடயங்களைப் பொறுத்து நமக்கான நியாயத்தை நிலை நாட்டிக் கொள்ள முடியும்.
இன்னும் சொல்லப்போனால், உலகம் முழுவதும் கூட இந்தச் சான்று நகல் செல்லுபடியாகும். ஆனால், தகவலோ, தகவல் கொடுத்தவரோ, பிரச்சினை என்று வரும் போது, நான் அப்படிச் சொல்லவில்லையே என்று பல்டியடிப்பது உண்டு அல்லவா? அப்படித்தான்..! ஒன்றுக்குமே உதவாது.
ஆனாலும், இதை பெற எவ்வளவு கஷ்டப்படுகிறீர்கள்?
அடி ஆத்தாடி, இப்படியெல்லாம் கூட தப்பித்துக் கொள்ள சட்டத்தில் இடமிருக்கிறதா? அப்படியானால், சட்டத்தில் ஆயிரத்தெட்டு ஓட்டைகள், சந்து பொந்துகள் இருக்கிறது என்பதெல்லாம் உண்மைதானே..? ஆனால், நீங்கள் என்னவோ சட்டம் சராசரியாக சரியாகத்தான் (நன்றாகத்தான்) இருக்கிறது. ஆனால், அதை கையாள்பவர்கள் தான் கையாலாகாதவர்களாக, கயமைத்தனம் மிக்கவர்களாக இருக்கிறார்கள் என்று கூறினீர்கள்?
அதனால், நீங்களே சட்ட விழிப்பறிவுணர்வோடு சட்டப் பிரச்சினைகளை ச(சி)ந்தியுங்கள், சாதியுங்கள் என்றல்லவா, “வக்கீல் என்றாலே கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!!” என்ற கட்டுரையில் சொன்னீர்கள், என நீங்கள் நினைத்தால், இதுவும் சரியே என்பதை விளக்கவும் கடமைப்பட்டிருக்கிறேன். இது பற்றியும் பின்னர் சொல்கிறேன்.
மேலே சான்றுக்குக் கொடுள்ள தமிழ்நாடு சட்டத்துறையின் கடிதத்தில் மேலும் நீங்கள் ஒரு செய்தியை உணரலாம். தங்களது கடிதத்தில் கேட்கப்பட்டுள்ள தகவல்களும் ஆவணங்களும் இத்துறையில் பராமரிக்கப்படுவதில்லை எனக் குறிப்பிட்டு இருக்கிறார்களே, அது எதை என்பதை உங்களால் யூகிக்க முடிகிறதா? என்று இத்தோடு படிப்பதை நிறுத்தி விட்டு கொஞ்சமாவது முயற்சி செய்து பாருங்கள். இது பற்றியும் பின்னால் சொல்கிறேன். உங்களது யூகத்தோடு ஒத்துப்போகிறதா? என சரிபார்த்து, உங்களின் சிந்தனைத் திறன் குறித்து, நீங்களே சுய மதிப்பீடு செய்து கொள்ளப் பேருதவியாய் இருக்கும்.
நமது நல்வாழ்வு எப்படி பஞ்ச பூதங்கள் மற்றும் ஐம்புலன்களின் அடிப்படையில் அடங்கியிருக்கிறதோ, அதுபோலவே, நமது அடிப்படை உரிமைகள், அடிப்படைக் கடமைகள், தார்மீகக் கடமைகள், அனைத்து விதமான உரிமைகள் என எல்லாமே, இந்திய அரசமைப்பு, இந்திய சாட்சிய சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், குற்ற விசாரணை முறை விதிகள், உரிமையியல் விசாரணை முறை விதிகள் என்ற ஐந்து சட்டங்களை மட்டுமே அடிப்படையாக கொண்டது.
எப்படி என்பதை சற்று விளக்கமாக, “நியாயம்தான் சட்டம்” என்ற தலைப்பில் எழுதிய பதிவில் தெளிவு படுத்தியுள்ளேன். அதனைப் படித்து புரிந்து கொண்ட பின், இதனைத் தொடருங்கள்.
இவ்வடிப்படையான ஐந்து சட்டங்களையும் பற்றி அறியாமல், வேறு எந்தச் சட்டத்தையும் பயன்படுத்த நினைப்பது, பயனைத்தராது. மாறாக, பாழ் கிணற்றில் தள்ளிவிடும் அல்லது பதம் பார்த்துவிடும். எதிரிகள் உட்பட எவரும் எள்ளி நகையாட இடம் கொடுத்து விடும். எச்சரிக்கை!
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை வரவேற்றவர்கள் மற்றும் பயன்படுத்துபவர்களில் ஒருவருக்குக் கூட இவ்வைந்து அடிப்படையான சட்டங்களும் தெரியாது என்பது ஏற்கனவே, என்னால் நிரூபிக்கப்பட்ட ஒன்றுதான் என்றாலும், “இந்நேரத்திலும்” அது குறித்து தெளிவுபடுத்த வேண்டியது மிகவும் அவசியம்.
முதன் முதலில், தமிழ்நாட்டில் தகவல் பெறும் உரிமைச் சட்ட விண்ணப்பத்திற்கு ரூ-50 கட்டணம் வசூலிக்கப்பட்டது. ஆனால், மத்திய அரசோ ரூ.10 கட்டணம் வசூல் செய்தது. மத்திய அரசு சட்டத்துக்கு எதிராக மாநில அரசு இப்படி கூடுதல் கட்டணம் பெறுவது இந்திய அரசமைப்பு கோட்பாடு 251க்கு விரோதமானது என்பதை உணர்த்தி, “எச்சட்டத்தின் அடிப்படையில், இப்படி கூடுதல் கட்டணம் வசூல் செய்கிறீர்கள்?” என, இந்திய சாட்சிய சட்டம் 1872இன் உறுபு 76இன் கீழ், சான்று நகலை கோரி 23.05.2006 தேதிய மனுவைச் சமர்ப்பித்தேன்.
“இப்படி வசூல் செய்ய வேண்டும் என்றால், இந்திய அரசமைப்பு கோட்பாடு 254(2)இன்படி மாநில அரசு, குடியரசுத் தலைவரிடம் இருந்து சிறப்பான அனுமதியைப் பெற வேண்டும். அப்படி ஏதும் சிறப்பான அனுமதியை வழங்கினீர்களா என்பதற்கான சான்று நகல் கோரி” குடியரசுத் தலைவருக்கும் அதன் நகலையே சமர்ப்பித்தேன்.
இதன் விளைவாக, 20.09.2006 முதலே தமிழ்நாட்டில் ரூ-10 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது என்பது (ரு)சிகர தகவல். ஆனால், இது தொடர்பாக தமிழக அரசோ அல்லது குடியரசு தலைவரோ எனக்கு எழுத்து மூலமான பதில் எதையும் கொடுக்கவில்லை. ஏன் கொடுக்கவில்லை, அது எப்படி நியாயமாகும் எனவும், நீங்கள் கேட்க வில்லையா? எனவும் கேட்கத் தோன்றும்.
இதில், எனது அடிப்படை நோக்கம், கட்டணம் குறைக்கப்பட வேண்டுமென்பதே! அதுபோலவே, குறைக்கப்பட்டு விட்டது. இதை நான்தான் செய்தேன் என்று எப்படிச் சொல்ல முடியும்?. சட்டம் தவறாக இருக்கிறது என சட்டப்படி சுட்டிக்காட்டிய போது, சட்டம் தன் கடமையைச் செய்திருக்கிறது என்று சொல்வதே முற்றிலும் சரி..!
ஏனெனில், இந்திய அரசமைப்பு கோட்பாடு 254(2)இன்படி, தமிழ்நாடு அரசு, குடியரசுத் தலைவரிடம் சிறப்பான அனுமதியைப் பெற்று கட்டணத்தை அமல்படுத்தி இருந்தால், நான் தலைகீழாக நின்றிருந்தாலும் கட்டண குறைப்பு நடந்திருக்காது.
பொதுவாக, ஒரு தனி நபரோ அல்லது அரசோ அல்லது பிற அதிகாரம் பெற்ற அமைப்போ தனது செயல் தவறு எனத்தெரிய வரும் போது, அது மேலும் நடக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டுமோ, அதைத்தான் செய்வார்களே தவிர, அதுவரை செய்து விட்ட தவறை ஒரு போதும் வெளிப்படையாக ஒப்புக்கொள்ளவே மாட்டார்கள். ஆனால், அதனையே வேறு வகையில் அவர்களுக்கு உணர்த்தும் போது, வேறு வழியில்லாமல் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இதுவே மனிதர்களின் மடத்தனமான இயல்பு.
ஏதோவொரு தவறை செய்து விடுகிறோம். அதனை யாராவது சுட்டிக்காட்டும் போது, பல்வேறு காரணங்களால், நேரடியாக ஒப்புக்கொள்ள இயலாமல், இல்லவே இல்லை என்று மல்லுக்கு நிற்கிறோம். ஆனால், அதையே உறுதியாகச் சொல்ல வேண்டியவர்கள் உறுதிப்படுத்தும் போது, ஒப்புக் கொள்ளத்தான் செய்கிறோம். இதை முன்னரே செய்திருந்தால், மல்லுக்கு நின்றிருக்க வேண்டியதில்லை என்பதோடு, நம் மீதான மதிப்பும் மரியாதையும் அதிகமாயிருக்கும்.
விளக்கமாகச் சொன்னால், நாம் புரிந்த குற்றத்தை மறுத்து, பின் அதுவே, நீதிமன்ற விசாரணையில் நிரூபணமாகி தண்டனை கொடுக்கும் போது ஏற்றுக் கொள்வதைச் சொல்லலாம். ஆனால், இதை எடுத்த எடுப்பிலேயே ஒப்புக் கொண்டிருந்தால், நீதிமன்றம் செல்ல வேண்டிய அவசியமே ஏற்பட்டிருக்காது. அப்படியே அவசியம் ஏற்பட்ட பின் ஒப்புக் கொண்டாலும் அதிகபட்ச தண்டனை குறைந்து நம்மீதான மதிப்பும் மரியாதையும் அதிகமாகும். இதுதான் உண்மையின் மகிமை.
இந்த விடயத்தில் தனி நபரான நாம் மட்டுமல்ல; நம்மை ஆளும் அரசாட்சியும் அப்படித்தான் இருக்கிறது. இது குறித்து நீதிமன்றங்கள் அவ்வப்போது கண்டனம் தெரிவிப்பதும் என் விடயத்தில் தலையிட உனக்கு அதிகாரமில்லை என அரசு நீதிமன்றத்தைக் கண்டிப்பதும் அவரவர்களுக்கு முறுக்கேறும் போதெல்லாம் நடந்து கொண்டு தானே இருக்கிறது?
கண்டனம் என்பதே, நான் அடிக்கிற மாதிரி அடிக்கிறேன்… நீயும் அழுகிற மாதிரி நடி… இதேபோல, நீ அடிக்கும் போது, நானும் அழுவது போல நடிக்கிறேன் என்கிற புரிந்துணர்வு ஒப்பந்த கண்துடைப்பு நாடகமே!
யாராக இருந்தாலும் செய்தது தவறாக (அறியாமையால் செய்ததாக) இருக்கும் போது, அதுவும் முதல் முதலாக இருக்கும் பட்சத்தில், இனிமேல் இப்படி செய்யக்கூடாது என எச்சரித்து விடுவிக்க முடியும். மற்றபடி, மற்றொரு முறை செய்தாலோ அல்லது தப்பாக (அறிந்தே, திட்டமிட்டே) செய்திருந்தால் தண்டிக்கத்தான் முடியுமே தவிர, கண்டிக்க முடியாது. இதுவே, சட்டத்தின் அற்புதமான அறிவுறுத்தல். ஆனால், மிகவும் அற்பத்தனமாக நீதிபதிகளால் பயன்படுத்தப்படுகிறது.
அப்படியே, ஒப்புக்குச் சப்பாக, அரசை நீதிமன்றம் கண்துடைப்புக்குக் கண்டித்தாலும், மக்கள் தங்களின் வாக்குரிமை மூலமும் தப்பு செய்த அரசை அவ்வப்போது தண்டித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதே நிலைமை கூடிய விரைவில் நீதிபதிகளுக்கும் வரும். அதற்கான அறிகுறிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தெரிய ஆரம்பித்து விட்டன.
எனது தவறை சரியான முறையில் எவராவது விளக்கிக்காட்டும் போது, ஒப்புக் கொண்டு அடுத்த கட்டத்திற்குச் சென்று விடுவேன் என்பதை விட, நானே அறியும் போதும், அதுபற்றி அறியாத உங்களுக்கும் நானாகவே தயங்காமல் தெரிவிப்பேன் என்பதை நீங்களே இந்நேரத்தில் உணர்ந்திருக்க வேண்டுமே! இல்லை என்றாலும் பரவாயில்லை. வாய்ப்பிருந்தால் மீண்டும் ஒருமுறை என்னவாக இருக்கும் என விடயத்தை மீட்டெடுக்கப் பாருங்கள் என்று சொல்லி இத்தோடு இதற்கு வாய்தா போடுகிறேன்.
இப்படி தவறை மறைக்க முயலாமல், வெளிப்படையாக ஒப்புக்கொள்வதால், எனக்குப் பல விதங்களில் நன்மையும் மதிப்பும் அதிகம். முக்கியமாக மனப் போராட்டம் உட்பட அனைத்து விதமான விடயங்களில் இருந்தும் உடனடி நிவாரணம் பெற்று விடுகிறேன்.
சரி, இத்தோடு எனது தனிப்பட்ட சிந்தனை முடிந்து விட்டது. இனி நமது கூட்டுச் சிந்தனைதான் மிச்சம். ஆம், பின்னர் பார்க்கலாம் என்று நாம் ஏற்கனவே வாய்தா போட்ட விடயங்கள் மூன்று இருக்கிறதல்லவா? அவை, ஒவ்வொன்றிலும் சிந்தனையைச் செலுத்தி, அதன் உள்ளுணர்வு உண்மையை வெளிக்கொணர்வோமா..!
முதலில் சட்டத்தில் சந்து பொந்துகள் பற்றி சற்றே அலசுவோம்.

1. சட்டத்தை யார் இயற்றுகிறார்கள்?
சட்டத்தைக் கையாள நினைப்பவர்களே அதனை இயற்றுகிறார்கள். யாருடைய ஆலோசனையின் பேரில் என்றால், அதிகபட்சம் அதைக் கையாள்பவர்களின் ஆலோசனையின் பேரில்தான் இயற்றப்படுகிறது. அதாவது, அரசுதான் சட்டம் இயற்றுகிறது. இதற்கு அடித்தளம் அமைத்து உதவி செய்வது, நாம் குற்றம் சாற்றும் சட்ட அறிவில்லாத அரசு ஊழியர்களும், வக்கீல்களும்தானே..? பின்னர் எப்படி அச்சட்டம் சரியாக இருக்கும்..? இதை எப்படி சந்து பொந்துகள் என சொல்ல முடியும்..?
நியாயம்தான் சட்டம் என்ற அடிப்படை தத்துவத்தில், நியாயமாக இயற்ற வேண்டிய சட்டத்தை அநியாயமாக இயற்றினால், அது கையாள்பவர்களின் கையாலாகாத்தனம் என்பதுதானே எதார்த்தமான உண்மை..!
அப்படியானால், இதற்குத் தீர்வுதான் என்ன?
நம்மைப் போன்ற சாதாரண மக்கள் சட்டத்தின் நோக்கம், தாக்கம், தர்க்கம் என அனைத்தையும் அலசி ஆராய்ந்து, அசாதாரணமான நியாயச் சிந்தனை அறிவைப் பெற வேண்டும். அப்போது அரசே நம்மைக் கலந்து ஆலோசித்து சட்டம் இயற்றும். இப்படிப்பட்ட சூழ்நிலை வரும் போதுதான் சட்டம் சரியாக இருக்கும்.
அப்படியில்லை என்றால், சந்து பொந்துகள் வழியாகத் தப்பிக்கத்தானே செய்வார்கள் என்ற எண்ணமும் வேண்டாம். ஏனெனில், திறந்த வெளியிலேயே தப்பித்து ஓட முடியாதவர்களுக்குச் சந்து பொந்துகள் மட்டும் எப்படி அவ்வளவு எளிதில் சாத்தியமாகி விடும்? மாறாக, சக்கையாக சிக்கிக்கொள்ளதானே வைக்கும்..! அவர்களைப் பிழிந்தெடுத்து, வரும் சாற்றை உற்சாக பானமாக அருந்த வேண்டியதுதானே, இனி நமது கடமையும், உரிமையும். என்ன நான் சொல்றது சரிதானே..?!
இது சரிதான். ஆனால், சட்டம் இயற்றும் போது நம்மைப் போன்றவர்களிடமும் கருத்து கேட்க வேண்டும் என்று சொல்கிறீர்களே? அதுபற்றி எங்களுக்கு எதுவும் புரியவில்லையே என கேட்கத் தோன்றினால், இதனை வெறும் அனுமானத்தின் அடிப்படையில் நான் சொல்லவில்லை.
மாறாக, தகவல் சட்ட கட்டணக் குறைப்பு அனுபவத்தில் உள்ளபடியே இதுதானே நடந்துள்ளது! ஆனாலும், நேரடியாகவே கருத்து கேட்ட ஒரு விடயத்தை ஆதாரமாகவே சொல்கிறேன்.
1967 ஆம் ஆண்டு, அண்ணா முதலமைச்சராக இருந்த போது, இந்து மதக் கோட்பாடுகளையும் திருமண தத்துவங்களையும் புறக்கணித்த, பகுத்தறிவு தந்தை பெரியார் சீர்த்திருத்த திருமணத்தை வலியுறுத்தினார். விரும்பிய தம்பதிகளுக்குத் தானே முன்னின்று நடத்தியும் வைத்தார். அவரின் இச்செயலானது அப்போது, இந்தியா முழுவதும் அமலில் இருந்த இந்து திருமண சட்டம் 1955க்கு எதிரானது என்பதால் பல்வேறு சட்ட சிக்கல்கள் எழுந்தன. தமிழக அரசுக்குப் பெரும் தலைவலியாய் இருந்தது.
இச்சிக்கல்களைச் சட்ட முறைப்படி தீர்ப்பதற்காக அமலில் இருந்த இந்து திருமண சட்டம் பிரிவு 7இல், கூடுதலாக 7அ ஆனது, தமிழ்நாட்டில் தகவல் பெறும் உரிமை விண்ணப்ப கட்டண குறைப்புக்கு அஸ்திவாரமில்லாது போனது போல் அல்லாமல், இந்திய அரசமைப்பு கோட்பாடு 254(2)இன் கீழ் குடியரசுத் தலைவரின் சிறப்பான அனுமதி என்னும் பலமான அஸ்திவாரத்தோடு சேர்க்கப்பட்டது.
இதன் மூலம், இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத இச்சிறப்பான சீர்திருத்தத் திருமணம் தமிழ்நாட்டில் மட்டும் இன்றும் அமலில் இருந்து வருகிறது. ஆனால், திராவிட இயக்கத்தினரில் கூட ஒரு சிலரைத் தவிர, வேறு எவருக்கும் இச்சட்ட விதி பற்றிய விழிப்பறிவுணர்வு இல்லை.
காதலர்கள் மத்தியில் இது குறித்து விழிப்பறிவுணர்வு ஏற்பட்டால், ஊரை விட்டு ஓடி ஒளிந்து வாழமாட்டார்கள். தாங்கள் வசிக்கும் இடத்தில் இருந்து கொண்டே, விரும்பியவரைத் திருமணம் செய்து கொண்டு நிம்மதியாக வாழத் தொடங்கி விடுவார்கள்.
ஆம்! காதலர்களுக்கு யார் துணை நிற்கிறார்களோ இல்லையோ, நிச்சயம் நண்பர்கள் துணை நிற்பார்கள்தானே..! காதலர்களுக்கு அதுபோதும். ஏனெனில், உறவினர்கள் அல்லது நண்பர்கள் அல்லது மற்றவர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டாலே சட்டப்படி செல்லத்தக்கது ஆகிவிடும். ஆனால், இச்சிறப்பு சட்டத்திருத்தம், தமிழ்நாடு வாழ் இந்து மதத்தைச் சார்ந்த காதலர்களுக்கு மட்டுமே பொருந்தும்.
இதே இந்திய அரசமைப்பின் சிறப்பு அனுமதியின் பேரில்தான், மும்பையில் சிவப்பு விளக்கு பகுதி வெளிப்படையாகவே செயல்படுகிறது என்பது கொசுறு தகவல். தகவலா? இல்லையில்லை, இதுவே உண்மை.
இச்சீர்த்திருத்த விடயத்தில், முக்கியமான விடயம் என்னவென்றால், இதற்கான சட்ட முன் வரைவை சட்ட வல்லுனர்கள் குழு தயார் செய்ததில், பெரியார் நிச்சயம் பிழை திருத்தம் செய்வார் என்ற கருத்தில் காண்பிக்கப்பட்டது.
என்ன இருந்தாலும் பெரியார் பெரியார்தானே..! அவருக்கு நிகர் அவர்தானே..?
And என்ற ஒரேயொரு மூன்றெழுத்து வார்த்தையை எடுத்து விட்டு அந்த இடத்தில், Or என்ற இரண்டெழுத்து வார்த்தையை போட வேண்டும் எனச் சொல்லி அவரே திருத்தியும் கொடுத்தாராம். அப்படியானால், சட்ட வரைவுக்குழு அடிப்படையில் என்ன தவறு செய்திருக்கிறது என்பதை உங்களால் யூகிக்க முடிகிறதா..?
அடிப்படையில் என்ன நோக்கத்திற்காக சடங்கு, சம்பிரதாயங்களில் இருந்து சீர்த்திருத்த திருமணத்தை முன் வரைவு செய்தார்களோ, அது அந்த நோக்கத்தை நிறைவு செய்யவில்லை என்பதோடு, சீர்த்திருத்த திருமணம் என்ற பெயரில், மறைமுகமாக முன்பு இருந்த சம்பிரதாய சடங்கு திருமணத்தையே அல்லது புதியதொரு சீர்த்திருத்த சம்பிரதாய சடங்குச் சட்டமாகவே இருந்தது. அதாவது, திருமணம் நடைபெற்றதைக் குறிக்கும் வகையில், “விருப்பத்திற்கு ஏற்ப மோதிரம் அணிவித்தல் அல்லது தாலி கட்டுதல்” என்பதற்குப் பதிலாக “மோதிரம் அணிவித்தல் மற்றும் தாலி கட்டுதல்” என ஆங்கிலத்தில் சட்ட முன் வரைவு செய்திருக்கிறார்கள் மெத்தப்படித்த மேதாவிகள். மொத்தத்தில் சீர்த்திருத்தத்தைச் சீர்குலைப்பதாக அச்சட்டத்திருத்தம் இருந்திருக்கிறது.
இவ்விடத்தில், அறிஞர் என்று அழைக்கப்பட்ட, மூன்று முதுநிலைப் பட்டம் பெற்ற அண்ணாவின் சட்டத்திறன் மற்றும் ஆங்கிலத்திறன் என்ன என்பது, ஆறாவது மட்டுமே படித்த பெரியாரால், நமக்கெல்லாம் இப்போதும், எப்போதும் வெட்ட வெளிச்சம்.
இத்தவறுக்கான அடிப்படை காரணம் என்ன? தனக்கே உரிய பொறுப்புணர்வு இன்மையும், கடமையுணர்வு இன்மையும், அதனால் பலனடையப் போவதோ அல்லது பாழாகப் போவதோ நாமில்லை என்ற நாட்டமின்மையும் தானே?
எனவே, தந்தைப் பெரியாரைப் போல, சட்டத்தால் பலனடையப் போகும் நாம்தான், அதன் மீது பொறுப்புணர்வோடு, கடமையுணர்வோடு நாட்டம் கொள்ள வேண்டும். இல்லையேல், நட்டத்தைதான் சந்திக்க வேண்டும் என்பதை இப்போது சிந்திக்க முடிகிறதுதானே..?!
சிந்தித்தால், மூளை தேய்ந்து விடும் என்ற தொற்றுநோய், பரவலாகவே பலருக்கும் இருக்கும் போல..! அதனால் சிந்திப்பதேயில்லை அல்லது சிந்திக்க சிரமப்படுகிறார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது.
உண்மையில், சிந்தனை ஒன்றும் சிரத்தையோடுஉளியால் கருங்கல்லில் சித்திரச் சிலை செதுக்குவது போன்று கடுமையானதல்ல. மாறாகவேறாகஏன் இப்படி நடக்கிறது என்ற சிறு பொறிதான்! இதுவேசிறப்பான சிந்தனைக்கான,இப்படியெல்லாம் எளிமையாகச் சிந்திக்க தூண்டும் வகையில் எழுதுவதற்கான ஏணிப்படி! (ஏன் இப்படி?)
அடுத்ததாக, சட்டத்துறையின் கடிதத்தில், “தங்களது கடிதத்தில் கேட்கப்பட்டுள்ள தகவல்களும் ஆவணங்களும் இத்துறையில் பராமரிக்கப் படுவதில்லை” என்று அளித்திருந்த பதில் குறித்து ஆராய்வோம்.
நாட்டில் மொத்தம் எத்தனை சட்டங்கள் அமலில் இருக்கின்றன என்ற எனது கேள்விக்குதான் இப்பதில். சட்டத்துறையிலேயே அது தொடர்பான ஆவணங்களைப் பராமரிக்கவில்லை எனில், வேறு யார்தான் பராமரிப்பது? இதை வேறு வெட்கமில்லாமல் எழுத்து மூலமாகவே சொல்கிறார்கள் என்றால், நாட்டில் சட்டம் மற்றும் சட்டதுறையின் அவலத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்.
ஆனாலும், நான் ஏற்கனவே சொன்னது போல, தங்களது தவறை மறைப்பதற்காக “தொடர்புடைய நிர்வாகத் துறைகளை அணுகி பெற்றுக் கொள்க” எனவும் தெரிவித்து இருக்கிறார்கள் அல்லவா? அப்படியானால், சட்டத்துறை நிர்வாகத்துறை இல்லையா? நிர்வாகத்துறை இல்லையென்றால், செயல்துறையா அல்லது நீதித்துறையா என்றால், நிச்சயமாக நீதித்துறை கிடையவே கிடையாது.
சரி, செயல்துறையே என்று தர்க்கத்துக்கு எடுத்துக் கொண்டாலும் கூட, சட்டப்படி எதையெதைச் செய்ய வேண்டுமோ அதை செயல்படுத்துவதுதானே செயல்துறை என்று பார்த்தாலும், சட்டம் தொடர்பான ஆவணங்கள் அவசியம் பராமரிக்கப்பட்டிருக்க வேண்டுமே..! ஏன், பராமரிக்கவில்லை? நிச்சயமாக இனிமேலும் பராமரிக்க முடியாது.
ஏனெனில், மக்கள் தொகையைக் கணக்கிட முடியாதபடி, எப்படி மக்கள் தொகை இருக்கிறதோ அதற்கு ஈடாக, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்து இன்று வரையிலும் இயற்றப்பட்ட சட்டங்களும் இருக்கின்றன. இந்த அவல நிலைக்கு அடிப்படைக் காரணம் என்ன?
ஒவ்வொரு ஆட்சியாளரும் அடுத்தும் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்ற உள்நோக்க அக்கறையில் என்னென்ன சட்டங்கள் அமலில் இருக்கின்றன என்பதை எல்லாம் கருத்தில் கொள்ளாமல், புதிது புதிதாக சட்டங்களை இயற்றி மக்களை மயக்குவதுதான். இப்படி இயற்றிய சட்ட திருத்தங்கள் பல திரும்பவும் இந்த அரசாலோ அல்லது அடுத்து ஆட்சிக்கு வரும் அரசாலோ (தற்போது தமிழ்நாட்டில் நடந்து கொண்டிருப்பதைப் போல) அல்லது நாட்டில் உள்ள இருபத்தியோரு உயர்நீதிமன்றங்களாலோ அல்லது உச்சநீதிமன்றத்தாலோ ரத்து செய்யப்பட்டிருக்கும்.
இதிலும், கூடுதல் கூத்து என்னவென்றால், உயர்நீதிமன்றத்தின் ரத்து உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்திருக்கும் என்பதோடு, உச்சநீதிமன்றம் தான் பிறப்பித்த உத்தரவை மீண்டும் தானே ரத்து செய்திருக்கும். என்ன கிறுகிறுன்னு தலைய சுற்றுகிறதா அல்லது கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல இருக்கிறதா..!?
அப்படி எதாவது நடந்தால், அந்தப் பாவம் எனக்கு வேண்டாம். தயவு செய்து இந்த விவகாரத்தை மட்டும் இத்தோடு விட்டு விடுங்கள். போகப் போகப் புரிந்து கொள்வீர்கள். யார் யாரோ செய்வதை அக்குவேறு ஆணிவேறாக எடுத்துச் சொல்லி புரியவைப்பதற்குப் புண்ணியமாக போகும்.
இந்தக் கூத்துக்களால், மத்திய சட்ட அமைச்சகம் மற்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உட்பட யாருக்குமே எவ்வளவு சட்டங்கள் நம் நாட்டில் உள்ளன என தெரியாது. எனக்கும்தான் என்பதும் திண்ணம்.
அடுத்ததாக, நான் செய்த தவறை நானே உணரும் போது, அதனைத் தயங்காமல் உங்களுக்கும் எடுத்துச் சொல்வேன் என்பது குறித்து பார்ப்போமா?
அடிப்படையில் தகவல் பெறும் உரிமைச் சட்ட எதிர்ப்பாளன் ஆன நான், கொள்கையை நிலைநாட்ட தகவல் கட்டணக் கொள்ளையை தட்டிக் கேட்கப் போய், உங்களுக்கெல்லாம் இத்தறுதலை சட்டத்தைப் பரப்பி விட்ட பாவத்திற்கு பரிகாரம் எதையும் பண்ண வேண்டாமா?
இதற்காகத்தான்,
அரசு, தனது குடிமகனுக்குத் தேவையான தகவலைத் தருவது என்பது,
தாய்தன் குழந்தைக்குத் தாய்ப்பால் ஊட்டுவது போன்றதாகும்.
என்ற தத்துவத்தை மையப்படுத்தி,
தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005
2ஆவது சுதந்திரமாஅரசின் தந்திரமா?”
என்ற தலைப்பில், சிறு ஆய்வு நூல் ஒன்றை எழுதியுள்ளேன்.
இதில், தகவல் பெறும் உரிமைச் சட்டம் எப்படி நாட்டில் அமலில் உள்ள அடிப்படை சட்டங்களுக்கெல்லாம் எதிராக இருக்கிறது, தாய்மொழி உரிமையை எப்படி பறிக்கிறது என்பது குறித்த மிகவும் விரிவானதொரு பட்டியலைத் தொகுத்துள்ளதோடு, அவை குறித்த சட்ட விளக்கத்தை விளக்கியும் உள்ளேன்.
மேலும், கட்டணக் குறைப்புக்கு காரணமான சான்று நகல் கோரும் மனு, சான்று நகலைத் தராத போது அடுத்தடுத்து மேற்கொள்ள வேண்டிய வழிவகைகள் என்பது உட்பட பல்வேறு விடயங்களைத் தொகுத்து உள்ளேன். இதன் பிரதியை நன்கொடை செலுத்தி பெற விரும்புவோர்
திரு.அய்யப்பன்: +919150109189, +919842909190 அல்லது 09842399880
ஆகிய உலாப்பேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
இந்தத் தறுதலை தகவல் சட்டத்தைப் பற்றி அலசப்போக, எவ்வளவோ சட்ட சங்கதிகள் (விடய விடைகள்) அறிவுக்குப் புலப்பட்டிருக்கிறது அல்லவா?

0 Add your Comments/Feedback:

Popular Posts

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியம் உணர்ந்து இந்த வலைப்பூவிற்கு வருகை தந்துள்ள உங்களை வருக! வருக!! என அன்புடன் வரவேற்று பயன் பெறுக! பெறுக!! என வாழ்த்துகிறேன்.
 photo Indian_Flag_Pole.gif

Social Media's

Total Pageviews

Labels

Flash Labels by Blogger Widgets

Unordered List

Blog Archive

Followers

 photo Animation4.gif
Related Posts Plugin for WordPress, Blogger...