Warrant Balaw Blog - वारंट बाला चिट्ठा

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியம் உணர்ந்து இந்த வலைப்பூவிற்கு வருகை தந்துள்ள உங்களை வருக! வருக!! என அன்புடன் வரவேற்று பயன் பெறுக! பெறுக!! என வாழ்த்துகிறேன்.

Neethiyaithedy

,

,

..

..

Aug 8, 2010

தேர்தல் விழிப்புணர்வு...

அனைவரும் தேர்தலில் வாக்களிக்க வேண்டியதன் (அ)வசியம் குறித்து 10-04-2009 தேதியன்று தினமணி நாளிதழில் எழுதிய நடுபக்க கட்டுரை...
‘ஓ’ போடு! 49-ஓ போடு!!
உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு நமது இந்தியா. இதற்காக இந்திய குடி மகனாகிய நாம் ஒவ்வொருவரும் பெருமைப்பட வேண்டும். இதில் பெருமைப்பட என்ன இருக்கிறது என்று நீங்கள் நினைக்கலாம்! எவ்வளவோ இருக்கிறது!!
ஜனநாயகத்தின் சிறப்பு அம்சமே நாடு, இனம், மொழிகளைக் கடந்து குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களின் உரிமைகளை அப்படியே வழங்குவதுதான். அப்படி இந்திய குடிமக்களாகிய நமக்கு வழங்கப்பட்டுள்ள முக்கிய உரிமைகளில் ஒன்றுதான் வாக்குரிமை என்னும் ஓட்டுரிமை. இந்திய அரசமைப்பு (சாசனம்) கோட்பாடு 326-இன்படி, 18 வயதை பூர்த்தி அடைந்த இந்திய குடிமகன் அல்லது மகள் அல்லது திருநங்கைகள் ஒவ்வொருவருக்கும் வாக்குரிமை உண்டு. இந்த ஒட்டுரிமை அடிப்படை உரிமையோ அல்லது அடிப்படை கடமையோ கிடையாது. மாறாக ‘‘தார்மீக உரிமையும், கடமையும்’’ என்றுதான் சொல்ல வேண்டும்.
அடிப்படை உரிமை அல்லது கடமை என்றால், இந்தெந்த உரிமைகள், கடமைகள் எல்லாம் உங்களுக்கு உண்டு. அதை பெறவோ அல்லது செய்யவோ எந்த தடையும் கிடையாது. அப்படி தடை ஏதும் வந்தால் அதனை சரிசெய்து தர கோரி நீதிமன்றம் சென்று, நிவாரனம் பெற முடியும். ஆனால், தார்மீக உரிமை என்பது நமக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு உரிமையை, கடமையாக செயல்படுத்தி பொது நலனுக்கு வித்திடுவதாகும். அப்படி நாம் வித்திடா விட்டால், நீங்கள் தார்மீக உரிமையை கடமையாகச் செய்துதான் ஆக வேண்டும் என்று கட்டாயப்படுத்தவோ, கேள்வி கேட்கவோ முடியாது.
மொத்தத்தில் அடிப்படை உரிமை என்பது ஒவ்வொருவரின் சுய உரிமையைக் காப்பது. தார்மீக உரிமை என்பது பொது உரிமையைக் காப்பதாகும். இப்படி பொது உரிமையைக்காக்க நமக்கு கிடைத்திருக்கும் பொன்னான, வரப்பிரசாதமான ஒரே தார்மீக உரிமைதான் ‘‘வாக்குரிமை’’.
அடிப்படை உரிமையை காப்பதால் உங்களின் உரிமை மட்டும்தான் காக்கப்படும். பொது உரிமையைக் காத்தால் அதன் உள்ளடக்கமாக உங்களின் சுய உரிமை காக்கப்பட்டு விடும். இதனை மக்களாகிய நாம் மறந்து, விட்ட காரணத்தால்தான் அடிப்படை உரிமையை பெற கூட அனுதினமும் அல்லாடிக் கொண்டிருக்கிறோம். யார் ஆண்டால் நாடு செழிக்கும்? செல்வவளம் பெருகும்? உலக நாடுகளுக்கெல்லாம் தலை சிறந்த நாடாக விளங்கும்? மற்ற நாடுகளுக்கு முன்னோடி நாடாக நல்வழி காட்டும் நாடாக விளங்குவதற்கு நம்மை யார் ஆளவேண்டும்? என்பதை குடி மக்களே தீர்மானித்து தேர்ந்தெடுக்கும் உரிமைக்கு பெயர்தான் வாக்குரிமை.
நாமோ, வாக்குரிமை குறித்த தங்களின் அறியாமையால், ஏனோதானோ என்று ஓட்டு போடுவது அல்லது ஓட்டு போட்டு என்ன ஆகப் போகிறது என்று ஆதங்கத்தில் ஓட்டுப் போடாமல் இருந்து விடுவது என்று ஜனநாயகத்திற்கு முற்றிலும் விரோதமான வழிமுறைகளையே ஒவ்வொரு தேர்தலிலும் கையாண்டு வருகிறோம்.
குழந்தைகளுக்கு இலவசமாக கல்வியைப் போதிக்கும் சிறப்பு வகுப்புக்குச் சட்ட விழிப்புணர்வு குறித்து பேசுவதற்காக சென்றேன். 15 வயது மதிக்கத்தக்க மாணவன் ஒருவர் கேட்ட கேள்விக்கு இதுவரை என்னால் பதில் கண்டு பிடிக்க முடியவில்லை. அம்மாணவன் கேட்ட கேள்வியை இதுவரை வாக்கு செலுத்தி வருபவர்கள் நிச்சயமாக சிந்தித்திருக்க மாட்டார்கள் என்றே நம்புகிறேன்.
''18 வயதுக்கு கீழானவர்களுக்கு ஏன் சார் ஓட்டு போட உரிமை வழங்க வில்லை?'' என்பதுதான் அவரது கேள்வி. ‘‘சட்டப்படி 18 வயதை அடையும் போதுதான் தெளிவானதொரு முடிவெடுக்கும் திறனை பெறுவதாக கால நிர்ணயம் செய்திருக்கிறார்கள்’’ என்றேன்.
அப்படியானால், ‘‘ஒட்டுப் போடுபவர்கள் எல்லாம் சிந்தித்துதான் ஓட்டு போடுகி றார்களா? ஓட்டுப் போட முடியாதவர்கள் எல்லாம் சிந்திக்கும் திறன் இல்லாதவர்களா?’’ என்று அடுத்த கேள்வியை தொடுத்தார். இதற்கு என்ன பதில் சொல்வது?
அவருடைய இந்த கேள்வி மேலோட்டமாக பார்க்க போனால் விதண்டாவாதமாக தெரியலாம். ஆனால் இதில் உள்ளார்ந்த பல அர்த்தங்கள் உள்ளன?
தங்களுக்கு வாக்குரிமை இல்லையே என அறிவுப்பூர்வமாக சிந்திக்கும் மாணவர்கள் ஒருபுறம் இருக்க, வாக்குரிமையைப் பற்றி கவலைப்படாத வர்களை என்னவென்று சொல்வது? கவலைப்படாதவர்கள் எல்லாம், அதற்கு காரணமாக சொல்வது இரண்டே காரணங் கள்தான். ஒன்று, அரசியலில் யாரும் நல்லவர்கள் இல்லை. மற்றொன்று, ஓட்டுப் போடுவதால் நமக்கு ஒரு பலனும் இல்லை. இந்த இரண்டு காரணங்களும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இருந்தாலும் கூட, அதற்காக தனது பொன்னான வாக்கை செலுத்தாமல் புறக்கணிப்பது தீர்வல்ல. மாறாக, ‘‘வாக்கை செலுத்துவதே!’’ சரி.
இதை வலியுறுத்தித்தான் பேராசிரியப் பெருந்தகை மு.வரதராசன் எழுதியுள்ள ‘‘அறமும் அரசியலும்’’ என்ற நூலில், அரசியல் கட்சிகள் பல உருவாக காரணம் என்ன? தொண்டர்கள் என்ற அன்பு நிலை மாறி தலைவர்கள் என்ற ஆசை நிலை எழுவது ஏன்? அரசியல் கட்சிகள் எப்படி குறுகிய நோக்கோடு உயர்ந்த கொள்கைகள் பேசி மக்களை மாக்கள் ஆக்குகிறார்கள்? குடியாட்சி குறைவுற காரணம் என்ன? வாக்குரிமையில் தேவையான தனியுரிமை போன்ற சீரிய கருத்துக்களை தொகுத்துள்ளார்.
மொத்தத்தில், மு.வ.வின் கூற்றுப்படி அரசியல் என்பது சாக்கடையல்ல. சாக்கடை யாக்கப்பட்ட ஒன்று. அதனை சுத்தம் செய்ய சமுதாயத்தின் மீது அக்கறை உள்ளவர்கள், அறநோக்கம் உள்ளவர்கள் அரசியலுக்கு வர வேண்டும். அப்படி இல்லாதவர்கள் அரசியலுக்கு வரும் போது அவர்களை வர விடாமல் தடுப்பது நமது கடமைதானே! இதற்கு என்ன செய்வது? எப்படி செய்வது?
எந்த ஒரு விசயத்துக்குமே இறுதியான தீர்வு என்றால் அது ஒன்றே ஒன்று மட்டும்தான். அதுவும் சட்டப்படியான தீர்வு மட்டும்தான். நாட்டில் நடக்கும் சங்கதிகள் எல்லாம் நல்லவிதமாக நடக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்படும் வரையறைதானே சட்டம்? அதில் எப்படி ஓட்டை இருக்க முடியும்? உண்மையாக, இதற்கு முன்பாக வாக்குரிமை என்பது குடிமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஒரே தார்மீக உரிமை என்பதையும், அதன் மகத்துவத்தையும் நம்மில் எத்தனை பேர் தெரிந்து வைத்திருக்கின்றோம்? எனவே, இந்திய குடிமக்களே வருகின்ற தேர்தலில் கட்டாயம் உங்களின் தார்மீக வாக்குரிமையை பதிவு செய்யுங்கள்.
வேட்பாளர்களின் மேல் உள்ள அதிருப்தியின் காரணமாக வாக்குரிமையை பதிவு செய்யாமல் இருந்து விட்டால், யார் வெற்றி பெறக்கூடாது என்பதற்காக உங்களின் வாக்குரிமையை புறக்கணித்தீர்களோ, அவர்களே உங்களின் வாக்குரிமையை கள்ள வாக்குரிமையாக பதிவு செய்து முன்னிலையில் வெற்றி பெறுவதற்கு அடிப் படையில் காரண கர்த்தாவாக இருந்து விடுவீர்கள்.
‘‘நமது ஜனநாயக கடமையில் சட்டம் நமக்கு தந்திருக்கும் சிறப்பானதொரு உரிமைதான், எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என எவர் ஒருவரும் தனது வாக்குரிமையை பதிவு செய்யும் உரிமை’’. தேர்தல் நடத்தை விதிகள் 1961-இன் விதி 49-ஓ இன்படி, ‘‘எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்ப வில்லை என வாக்குரிமையை செலுத்த ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் சட்டப் படியான உரிமை உண்டு’’ என்பதால் தேர்தலில் வேட்பா ளர்களின் தலை விதியை நிர்ணயிப்பதில் இச்சட்டவிதிக்கு நிச்சயம் முக்கிய பங்கு உண்டு.
இவ்விதியின் கீழ் உங்களின் வாக்குரிமையை செலுத்தி விட்டால் உங்களின் வாக்குரிமையை வேறு யாரும் கள்ள வாக்குரிமையாக பதிவு செய்ய முடியாது என்பதோடு தலைச்சிறந்த வேட்பாளர்களை எங்களுக்கு வழங்குங்கள், உங்களுக்கு எங்களின் வாக்குரிமையை வழங்குகிறோம் என தேர்தல் மூலம் அரசியல் வாதிகளுக்கும், அரசியல் கட்சிகளுக்கும் தெரிவிப்பதாகவும் ஆகிவிடும்.
இப்படி வாக்களிக்க 17எ என்ற படிவத்தை பூர்த்தி செய்து தர வேண்டும் என்ற தவறான தகவலை மெத்தப்படித்த மேதாவிகள் கூட தங்களின் அறியாமையால் பரப்பி வருகிறார்கள். இது முற்றிலும் தவறு. உண்மையில் படிவம் 17எ என்பது, ‘‘ஓட்டு போட வருகின்ற அத்தனை வாக்காளர்களும் பதிவு செய்ய வேண்டிய ஒன்றே. இதில் கையெப்பமிட்ட பிறகு தான் சாதாரணமாகவே வாக்குரிமையை செலுத்த முடியும்’’. உண்மையை உணர்ந்து கொள்வதற்காக அப்படிவத்தை இங்கு தொகுத்து கொடுத்து உள்ளேன்.
எந்த வேட்பாளருக்கும் வாக்குரிமையை செலுத்த விரும்பா விட்டால், நான்காவது காலமாக இடம் பெற்றுள்ள குறிப்பு (Remarks) பகுதியில், ‘‘எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை’’ என எழுதி அல்லது அதிகாரியை எழுத சொல்லி அதன் அருகில் நீங்கள்தான் அதை பதிவு செய்தீர்கள் என்பதற்கு ஆதாரமாக கையெப்பமிட அல்லது கைரேகையை பதிக்க வேண்டும்.
பொதுவாக வாக்குரிமை பதிவு என்பது ரகசியமானதுதான் என்றாலும் கூட இவ்விதியின் கீழ் வாக்கு பதிவு செய்யும் போது வெளிப்படையாக தெரியக் கூடியதாகவே இன்று வரை இருக்கிறது. இதனை இரசிய பதிவாக மாற்றக் கோரி இதற்கென தனியாக ஒரு சிறப்பு பொத்தானை பொருத்த வேண்டும் என உத்தரவிடக்கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையம் ஒப்புதல் தெரிவித்து விட, மத்திய அரசோ மௌனம் காத்து வருகிறது.
நீதிவழங்க வேண்டிய உச்சநீதிமன்றமோ இவ்வழக்கை பல வருடங்களாக நிலுவையில் வைத்திருப்பதன் மூலம் நீதிக்கு தண்டனை வழங்கி வருகிறது.
அரசியல் கட்சிகள் தங்களின் சின்னத்திற்கும், வேட்பாளருக்கும் பிரச்சாரம் செய்வது போலவே இந்த 49-ஓ க்கு தன்னார்வலர்கள் யார் வேண்டுமானாலும் பிரச்சாரம் செய்யலாம் என்பதற்கான உத்தரவை மாநில தேர்தல் ஆணையத்திடம் இருந்து சமுதாய மாற்றம் விரும்பும் இந்திய மக்கள் சங்கத்தின் நிறுவனரும், செயலாளரும் ஆகிய ஆனந்தன் எழுத்து மூலமாகவே பெற்றுள்ளார்.
எனவே, நீங்களும் கூட, வாக்குரிமையின் அவசியத்தை வலியுறுத்தும், பிரச்சாரத்தில் இறங்குவதன் மூலம் நல்லவர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட வழிகோலுவது நம் நாட்டுக்கு ஆற்ற வேண்டிய கடமை யல்லவா?
எது எப்படி இருந்தாலும், வாக்குரிமையைச் செலுத்தும் போது நமக்கு பிரச்சனை வரும் என கவலைப்படத்தேவையில்லை. ஏனெனில், பிரச்சனை என்று வந்தால் இது போன்ற ஒரு வாக்குரிமை இருப்பது பிரபலமாகிவிடும் என்பதால் அரசியல் கட்சிகள் பிரச்சனை செய்யமாட்டார்கள். அப்படியே பிரச்சனை செய்தாலும், பிரச்சனைக்குத் தீர்வாக ரகசியமாக வாக்குப் பதிவு செய்வதற்கான சிறப்புப் பொத்தான் வந்துவிடும்.

1 Add your Comments/Feedback:

narayanaswamy said...

sir,

Recently i have met in your room. Your suggestions and service to the people is essential and also creat a awarness of law ect.

with warm regards
n. sri rangarajalu
9444827193

Popular Posts

No law, no life. Know law, know life! என்ற நமது அடிப்படைக் கொள்கை தத்துவத்திற்கு இணங்க சட்ட விழிப்பறிவுணர்வின் (அ)வசியம் உணர்ந்து இந்த வலைப்பூவிற்கு வருகை தந்துள்ள உங்களை வருக! வருக!! என அன்புடன் வரவேற்று பயன் பெறுக! பெறுக!! என வாழ்த்துகிறேன்.
 photo Indian_Flag_Pole.gif

Social Media's

Total Pageviews

Labels

Flash Labels by Blogger Widgets

Unordered List

Followers

 photo Animation4.gif
Related Posts Plugin for WordPress, Blogger...