பொய்யர்களின் தொழிலை ஒழிப்பது எப்படி என்கிற எனது சட்ட ஆராய்ச்சிக் கடமைப்பணியின் எட்டாவது வருடத்தில், பொய்யர்களின் தொழிலானது விபச்சாரத்திற்கு இணையானது என்கிற மகாத்மாவின் தத்துவக் கருத்தை இந்திய தன்னாட்சி நூலில் படிக்க நேர்ந்தது.
அதன் இறுதிப்பகுதியில்,‘‘இவ்விபச்சாரிகளின் (பொய்யர்களின்) தொழில் எப்படி வளர்ந்து என்பது குறித்து, நீங்கள் மிகச்சரியாக தெரிந்து கொண்டால், அத்தொழில் குறித்து எனக்கிருக்கும் வெறுப்பே உங்களுக்கும் ஏற்படும்’’ என குறிப்பிட்டு இருப்பார்.
அப்படியானால், நிச்சயமாக மிகக்கேவலமானதொரு முறையில் தாம், அத்தொழில் வளர்ந்திருக்க வேண்டுமென்பதும், இப்படி வளர்ந்த தொழில் ஒருபோதும் உத்தமமாக விளக்க முடியாது என்பதும் திண்ணம். இதனால்தாம், நான் பொய்த்தொழிலுக்கோ அல்லது நிதிபதி தொழிலுக்கோ முயற்சிக்காமல், உங்களுக்கு போதித்துக் கொண்டிருக்கிறேன்.
இதைத்தாம், நான் வேறு வகைகளில் நீதியைத்தேடி… நூல்களிலும் குறிப்பிட்டு உள்ளேன்.
இதுபுரியாத பலரும், ஒரு பக்க மனுவையோ, தீர்ப்பையோ கூட சரியாக எழுதத்தெரியாதவர்கள் பொய்யர்களாக, நிதிபதிகளாக பொருளீட்டிக் கொண்டிருக்க, நீங்களோ புத்தகத்தை கூட பொதுவுடைமையென அறிவித்து விட்டு, பொருளீட்டாமல் இருக்கிறீர்களே என ஆதங்கப்படுவார்கள்.
சரி, நம்ம விசயத்துக்கு வருவோம். ஆனாலுங்கூட, காந்தி அப்பொய்த்தொழில் எப்படி வளர்ந்தது என விரிவாக சொல்லாமல் விட்டுவிட்டாரே என்கிற ஆதங்கம் ஒருபுறமென்றால், மறுபுறமோ வேறு எதிலும் எழுதாமலா போயிருப்பார் என்கிற சந்தேகம் வேறு.
சரி, நமக்கு தெரிய அவர் இறுதியாக எழுதிய புத்தகம் சத்தியசோதனைதாம். எனவே, இதுபற்றி அந்நூலில் எதாவது எழுதியிருக்கிறாரா என பார்த்துவிடுவோம் என, அந்நூலைப் பிரித்தால் வந்த பக்கமே, ‘‘பாரிஸ்டர் ஆனேன். ஆனால் பிறகு….?’’ என்கிற தலைப்புதாம்.
நீதியைத்தேடி… சட்டங்கள் உங்கள் பாக்கெட்டில் நூலில், காந்தி பொய்த்தொழிலில்கூட, மெய்யாக எப்படி நடந்துகொண்டார் என்பதனை சத்திய சோதனையில் இருந்துதாம் தொகுத்து அளித்தேன். இதனை பலரும் வரவேற்றார்கள். இதற்காக அச்சத்தியசோதனை முழுவதையும் படிக்க நேர்ந்திருக்கும் என நீங்கள் நினைத்தால், அது மாபெரும் தவறு.
ஆமாம், நான் எதார்த்மாக திருப்பிய பக்கங்களில் கிடைத்த தகவல்களைத்தாம் தொகுத்தளித்துள்ளேன். ஆகையால், காந்தி இப்பொய்த்தொழிலை வெறுக்குமளவிற்கு, ஆங்கிலேய அரசாங்கம் சட்டப்படிப்பு படித்தோருக்கு மது பானங்கள் உள்ளிட்டவைகளை வழங்கியது என்பதை என்பதையெல்லாம், சத்திய சோதனையில்தாம் சொல்லியிருப்பார் என்பது தெரியாமலே போயிற்று.
இதோ, உங்களுக்காக மகாத்மாவின் சத்திய சோதனையில், பாரிஸ்டரானேன். ஆனால் பிறகு…..? பகுதியில் இருந்து…
பாரிஸ்டர் ஆவதற்காகவே நான் இங்கிலாந்துக்குச் சென்றேன். ஆனால், அதைப்பற்றி இதுவரை ஒன்றும் சொல்லாமலேயே தள்ளிவைத்து வந்திருக்கிறேன். அதைப்பற்றிச் சுருக்கமாகச் சொல்ல வேண்டிய சமயம் வந்துவிட்டது.
ஒரு மாணவன், பாரிஸ்டர் ஆவதற்குப் பூர்த்தி செய்ய வேண்டிய நிபந்தனைகள் இரண்டு உண்டு. இதில் ஒன்று, ‘முறையை அனுசரிப்பது’ இத்தகைய பன்னிரெண்டு முறைகள் சுமார் மூன்று ஆண்டுகளுக்குச் சமம். மற்றொன்று, ‘பரீட்சைகளில் தேறுவது’.
‘முறையை அனுசரிப்பது’ என்றால், முறைப்படி தின்பது;
அதாவது ஒரு கால அளவில் நடக்கும் சுமார் இருபத்து நான்கு விருந்துகளில் குறைந்தது ஆறு விருந்துகளுக்காவது போக வேண்டும். விருந்தில் கலந்து கொள்ளுவதென்றால், சாப்பிட்டாக வேண்டும் என்பது அல்ல.
குறிப்பிட்ட நேரத்தில் வந்துவிட்டதாக அறிவித்துக்கொண்டு, விருந்து முடியும்வரை அங்கேயே இருக்க வேண்டும். உண்மையில் ஒவ்வொருவரும் சாப்பிட்டார்கள்; குடித்தார்கள். நல்ல உணவு வகைகளும், உயர்ந்த மதுபானங்களும் அங்கே வழங்கப்படும்.
ஒரு சாப்பாட்டுக்கு இரண்டரை ஷில்லிங்கிலிருந்து மூன்றரை ஷில்லிங் வரையில் ஆகும்: அதாவது இரண்டு, மூன்று ரூபாய் ஆகும். ஒருவர் ஹோட்டலில் சாப்பிட்டால் மதுபானத்திற்கு மாத்திரம் அவ்வளவு தொகை கொடுக்க வேண்டி வரும். ஆகையால், இது தமானது என்றே கருதப்பட்டது.
சாப்பாட்டின் விலையைவிட மதுபானச் செலவு அதிகமாவது என்பது இந்தியாவிலுள்ள நமக்கு -நாம் ‘நாகரிகம்’ அடையாதவர்களாக இருந்தால் ஆச்சரியமாக இருக்கும். முதன் முதலாக எனக்கு இந்த விவரம் தெரிந்தபோது நான் திடுக்கிட்டே போனேன். குடியில் இவ்வளவு பணத்தை வாரி இறைத்துவிட அவர்களுக்கு எப்படித்தான் மனசு வருகிறது என்று ஆச்சரியப்பட்டேன்.
பிறகு நான் இதைப் புரிந்து கொண்டேன். இந்த விருந்துகளில் அநேகமாக நான் எதுவும் சாப்பிடுவதில்லை. ஏனென்றால், நான் சாப்பிடக்கூடியவை ரொட்டியும் வேக வைத்த உருளைக் கிழங்கும், முட்டைக் கோஸூமே. இவையும் எனக்குப் பிடிப்பதில்லையாகையால் ஆரம்பத்தில் இவைகளையும் நான் சாப்பிடுவதில்லை. பின்னால் இவை எனக்கு ருசியாயிருக்க ஆரம்பித்ததும், வேறு பண்டங்களும் வேண்டும் என்று கேட்கும் துணிச்சலும் எனக்கு உண்டாயிற்று.
மாணவர்களுக்கு அளிக்கப்பட்ட விருந்தைவிட, நீதிபதிகளுக்கு அளிக்கும் விருந்து மிகவும் உயர்ந்ததாக இருக்கும். என்னைப்போல ஒரு பார்ஸி மாணவரும் மாமிசம் சாப்பிடாதவர். நீதிபதிகளுக்குப் பரிமாறும் சைவ உணவு வகைகளை எங்களுக்கும் பரிமாறவேண்டும் என்று நாங்கள் இருவரும் மனுச்செய்து கொண்டோம். எங்கள் மனு அங்கீகரிக்கப் பெற்றது, நீதிபதிகளின் மேஜைகளிலிருந்து பழங்களும் மற்றக் கறிகாய்களும் எங்களுக்குக் கிடைக்கத் தொடங்கின.
நான்கு பேர் அடங்கிய ஒரு குழுவிற்கு, இரண்டு பாட்டில் ‘ஒயின்’ என்ற வகையில் மதுபானம் கொடுத்தனர். நான் அதைத்தொடுவதே இல்லை. ஆகையால், என்னுடன் இருக்கும் மற்ற மூவருக்கு இரண்டு ‘ஒயின்’ பாட்டில்களைக் காலி செய்ய வசதி இருந்தது.
இதற்காக என்னைத் தத்தம் குழுவில் சேர்த்துக் கொள்ளுவதற்குப் பலர் விரும்பியதால், எனக்கு எப்பொழுதும் கிராக்கி இருந்து வந்தது. ஒவ்வொரு காலப் பகுதியிலும் இந்த நிகழ்ச்சியில் ‘பெரிய விருந்து’ என்று ஒன்று நடக்கும்.
‘போர்ட்’, ‘ஷெர்ரி’ ஒயின்களும் அதிகமாக, ‘ஷாம்பேன்’ போன்ற ஒயின்களும் கொடுக்கப்படும். ஆகையால், அதற்கு வருமாறு எனக்கு விசேஷக் கோரிக்கைகள் வரும். அந்தப்பெரிய விருந்து நாட்களில் எனக்குக் கிராக்கி வெகு அதிகம் இருக்கும்.
இத்தகைய விருந்துகள், பாரிஸ்டராவதற்கு மாணவர்களை எவ்விதம் தகுதியுடையவர்கள் ஆக்குகின்றன என்பதை நான் அப்பொழுதும் உணரவில்லை; அதற்குப் பின்னரும் உணரவில்லை. மிகச்சில மாணவரே இத்தகைய விருந்துகளில் கலந்துகொள்ளும் காலம் ஒன்று இருந்தது. அப்பொழுது அம்மாணவர்களும் நீதிபதிகளும் கலந்து பேசுவதற்குச் சந்தர்ப்பங்கள் இருந்தன; பிரசங்கங்களும் நடந்தன. இத்தகைய சந்தர்ப்பங்களினால் அவர்களுக்கு உலக ஞானத்துடன், ஒருவகையான மெருகும் நாகரிகமும் உண்டாவதற்கும் வசதி இருந்தது; பேச்சுத் திறனையும் வளர்த்துக் கொள்ளமுடியும்.
என் காலத்திலோ, நீதிபதிகளுக்கு என்று தனியாகவே விருந்து மேஜைகள் போடப் பட்டிருந்ததால் அத்தகைய வாய்ப்பு என்றுமே எனக்குக் கிடைக்கவில்லை. இந்த வழக்கத்திற்கு நாளா வட்டத்தில் பொருள் இல்லாமலே போயிற்று. என்றாலும், பழைமையில் பற்றுக் கொண்ட இங்கிலாந்து, அதை விடாமல் வைத்துக் கொண்டிருந்தது.
பரீட்சைக்கு உரிய பாடங்கள் மிகச் சுலபமானவை. பாரிஸ்டர்களை, ‘விருந்து பாரிஸ்டர்கள்’ என்றும் வேடிக்கையாக அழைப்பது உண்டு. உண்மையில் பரீட்சைகள் ஒரு பயனும் இல்லாதவை என்பது எல்லோருக்கும் தெரியும்.
என் காலத்தில் ரோமன் சட்டப்பரீட்சை, பொதுச் சட்டப்பரீட்சை என்ற இரு பரீட்சைகள் உண்டு. இவற்றிற்கு இன்னவை பாடப்புத்தகங்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தன. தனித்தனிப் பகுதிகளுக்கும் பரீட்சை எழுதலாம்.
அப்பாடப் புத்தகங்களை யாரும் அநேகமாக படிப்பதே இல்லை. இரண்டே வாரங்களில் ரோமன் சட்டத்திற்குப் போட்டிருக்கும் குறிப்புக்களை மாத்திரம் மேலெழுந்த வாரியாகப் பார்த்துவிட்டு, ரோமன் சட்டப்பரீட்சையில் பலர் தேறிவிட்டதை நான் அறிவேன்.
அதேபோலப் பொதுச் சட்டத்திற்குள்ள குறிப்புக்களை மாத்திரம் இரண்டு மூன்று மாதங்களில் படித்து விட்டு, அப்பரீட்சையிலும் தேறி விடுவார்கள். கேள்விகள் சுலபமானவை; மாணவர்கள் அளிக்கும் பதில்களுக்கு மார்க் கொடுப்பவர்களும் தாராளமாக நடந்து கொண்டார்கள்.
ரோமன் சட்டப் பரீட்சைக்குச் செல்பவர்களில் 100-க்கு 95 முதல் 99 வரையில் தேறிவிடுவர். முடிவான பரீட்சையிலும் 100-க்கு 75 அல்லது அதற்கு அதிகானவர்கள் கூடத் தேறி விடுவார்கள். ஆகையால் பரீட்சையில் தேறாமல் போய்விடுவோமோ என்ற பயமே இல்லை. பரீட்சைகளும் ஆண்டுக்கு ஒரு முறை அல்ல, நான்கு முறைகள் நடந்தன! இதில் கஷ்டம் இருப்பதாகவே யாரும் நினைப்பதற்கில்லை.
ஆனால், நான் மாத்திரம் அவற்றைச் சிரமமானவையாகச் செய்துகொண்டு விட்டேன். பாடப் புத்தகங்கள் எல்லாவற்றையும் படிக்க வேண்டும் என்று கருதினேன். அவைகளைப் படிக்காமல் இருந்துவிடுவது ஒரு மோசடி என்று எண்ணினேன். அவைகளை வாங்குவதில் அதிகப்பணமும் செலவிட்டேன்…
நான் என்னதான் படித்திருந்தேனாயினும், எனக்குள் இருந்த பயத்திற்கும், சக்தியற்றிருக்கிறேன் என்ற உணர்ச்சிக்கும் முடிவே இல்லை. வக்கீல் தொழிலை நடத்துவதற்குத் தகுதி பெற்று விட்டதாக நான் உணரவே இல்லை. எனது இந்தச் சக்தியின்மையைப் பற்றி விவரிக்க ஒரு தனி அத்தியாயமே வேண்டும் என்று கூறும் காந்தி, எனது சக்தியின்மை என்கிற அத்தியாயத்தில்…
பாரிஸ்டர் ஆகிவிடுவது எளிதாகவே இருந்தது. ஆனால், பாரிஸ்டர் தொழிலை நடத்துவதுதான் மிகக் கஷ்டமாக இருந்தது. நான் சட்டங்களைப் படித்திருந்தேன். ஆனால், சட்டவாதம் செய்யும் முறையைக் கற்றுக்கொள்ளவில்லை. சட்டக் கோட்பாகளையெல்லாம் சிரத்தையுடன் படித்திருந்தேன். அவற்றை என் தொழிலில் எப்படிப் பயன்படுத்திக்கொள்ளுவது என்பது மட்டும் எனக்குத் தெரியவில்லை.
‘மற்றவர்களின் சொத்துக்களுக்குக் கெடுதல் ஏற்படாத வகையில் உன் சொத்தைப் பயன்படுத்திக்கொள்’ என்பது அத்தகைய கோட்பாடுகளில் ஒன்று. ஆனால், ஒரு கட்சிகாரரின் நலனுக்கு ஏற்றவாறு இந்தக் கோட்பாட்டை எப்படிப் பயன்படுத்துவது என்பது எனக்குத் தெரியவில்லை. இந்தக் கோட்பாட்டின் மேல் எழுந்த முக்கியமான பெரிய வழக்குகளின் விவரங்களையெல்லாம் படித்துப் பார்த்தேன். என்றாலும், வழக்குகளில் அதை அனுசரிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்படவில்லை.
இதுவல்லாமல், இந்தியச் சட்டத்தைக் குறித்து நான் எதுவுமே கற்றுக்கொள்ளவில்லை. ஹிந்து, முகமதியச் சட்டங்களைப் பற்றியோ எனக்கு ஒன்றுமே தெரியாது. ஒரு பிராதைத் தயாரிப்பது எப்படி என்பதையும் நான் தெரிந்து கொள்ளவில்லை. எனவே, திக்குத்திசை தெரியாமல் தவித்தேன்…. என விவரிக்கிறார்.
ஆனானப்பட்ட காந்தியே இப்படித்தான் இருந்திருக்கிறார் என்பது, தனக்குதானே வாதாட நினைக்கும் உங்களுக்கு ஊக்கமாக இருக்கவேண்டும். பொய்யர்களின் தொழில் கூட காந்தி ஏன் உத்தமராக விளங்கினார் என்பது இப்போது விளங்கியிருக்கும்.
மாணவர்களை போதைக்கு அடிமைப்படுத்தி பொய்யர்களின் தொழிலை வளர்த்திருக்கிறார்கள் என்பதோடு, படிக்கும் போதே, மாணவர்களை நிதிபதிகளுடன் சேர்ந்து மது குடிக்க பழக்கிவிட்டு, இடைத்தரகர்களாக செயல்படுவதற்கு வழிவகுத்திருக்கிறார்கள்.
மொத்தத்தில், எப்படி கூட்டிக்கழித்து பார்த்தாலும், பொய்யர்களின் தொழில் மேம்படவோ அல்லது உத்தமமாக விளங்கவோ இனியொரு போதும் வாய்ப்பில்லை என்பதோடு, வக்கீல் என்றாலே கூலிக்கு மாரடிக்கும் பொய்யர்களே! இடைத்தரகர்களே!! என்று நான் முன் மொழிந்துள்ள தத்துவம், உலகம் உள்ளவரை பொய்க்காது.